அவசரகால அறிவிப்பு அவசியம் என்ற அர்மடா கூற்றுக்கு, டிஏபி இளைஞர் அணி கண்டனம்

பத்து சாபி இடைத்தேர்தல் நடைபெறாமல் தடுக்க ஒரே பாதுகாப்பான நடவடிக்கை அவசரகால அறிவிப்பு என்ற பெர்சத்து இளைஞர் பிரிவு (அர்மடா) தலைவரின் அறிக்கையை டிஏபி இளைஞர் துணைத் தலைவர் சியோங் யோக் கோங் கண்டித்தார்.

அர்மடா சட்டப் பணியகத்தின் தலைவர், மொஹமட் சித்திக் மொஹமட் அஸானி நேற்று வெளியிட்ட அறிக்கையை சியோங் விவரித்தார், பெர்சத்து அதிகார வெறிகொண்ட ஒரு கட்சி என்பதை நிரூபிக்கிறது, நேரத்தைப் பொருட்படுத்தாமல், மக்களைப் புறக்கணித்து அரசியலில் ஈடுபட அது தயாராக உள்ளது.

“பத்து சாபி இடைத்தேர்தலில், தேசியக் கூட்டணி அல்லது தேசிய முன்னனி வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை என்றாலும், சுயேட்சை வேட்பாளர்களும் சபாவில் உள்ள பிற உள்ளூர் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துவதைத் தடுக்க முடியாது என மொஹமட் சித்திக் கூறியுள்ளார்.

பி.என்., பக்காத்தான் ஹராப்பன், பார்ட்டி சிந்தா சபா, ஸ்டார் மற்றும் எஸ்.ஏ.பி.பி ஆகியவை இம்முறை பத்து சாபி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளதை நான் முகமது சித்திக்’குக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“மாநிலத்தின் முக்கியக் கட்சிகள் வாரிசனுக்கு வழிவிடத் தயாராக இருக்கையில், அதிகளவில் பிரச்சாரங்கள் இருக்காது, நிச்சயமாக இது கோவிட் -19 தொற்று பரவாமல் இருப்பதற்கு உதவும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து கட்சிகளும் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்து, வாரிசனுக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுத்தால், பத்து சாபியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்று அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசானின் கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவித்த மொஹமட் சித்திக் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இருப்பினும், மொஹமட் ஹசானின் முன்மொழிவு நியாயமற்றது என்று முகமது சித்திக் கருதுகிறார்.

பத்து சாபி இடைத்தேர்தலைத் தவிர்ப்பதற்காக, நாடு தழுவிய அளவில் அவசரகாலப் பிரகடனம் செய்ய பெர்சத்து ஏன் மிகவும் ஆசைப்படுகிறது என்று சியோங் கேள்வி எழுப்பினார்.

“மக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு தொற்றுநோயை எதிர்த்து நாடு போராடி கொண்டிருக்கும் இந்நேரத்தில், பெர்சத்து மக்கள் நலன்களுக்காக வாரிசனுக்கு வழிவிட வேண்டும்.

“அரசியல் விளையாட்டை நிறுத்திவிட்டு, ​​அரசியல் முதிர்ச்சியைக் காட்டுங்கள் என்று நான் பெர்சத்து மற்றும் அர்மடாவுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.