பத்து சாபி இடைத்தேர்தல் : மொஹமட் ஹசானின் திட்டத்திற்கு வாரிசான் பாராட்டு

கோவிட் -19 தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சபாவின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பத்து சாபி இடைத்தேர்தலில் வாரிசானுக்கு வழிவிட வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசன் முன்மொழிந்ததை வாரிசான் பொதுச் செயலாளர் லோரெட்டோ படுவா பாராட்டினார்.

தீபகற்பத்தைப் போல் அல்லாமல், சபாவின் தற்போதைய நிலைமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காரணம் இங்குப் போதுமான அளவில் பணியாளர்களோ உபகரணங்களோ இல்லை என்றார் லோரெட்டோ.

“எனவே, சபாவில் கோவிட் -19 பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

“அந்த வகையில், பத்து சாபியில் வாரிசானுக்கு வழிவிட அம்னோ தயார் என்ற தோக் மாட்’டின் (மொஹமட்) முன்மொழிவு பாராட்டுக்குரியது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லோரெட்டோ இன்று தனது அறிக்கையில், பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு மீதமுள்ள இரண்டு ஆண்டுகால நேரத்தில், அரசியல்வாதிகள் மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு பணியாற்றினால் நல்லது என்றும் கூறியுள்ளார்.