‘அரசாங்கம் உதவ வேண்டும், விமான நிறுவனங்களும் தியாகம் செய்ய வேண்டும்’

கோவிட் -19 பெருந்தொற்று காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும், ஆனால் அதேசமயம், விமான நிறுவனங்களும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தின் (யுனிமாஸ்) பொருளாதார வல்லுநர், பேராசிரியர் டாக்டர் சசாலி அபு மன்சோர், கோவிட் -19 தொற்று குறைந்துவிட்ட பிறகு, விமான நிறுவனங்களை ஒழிப்பதா அல்லது மீண்டும் கீழே இருந்து கட்டியெழுப்புவதா என முடிவெடுப்பது கடினமான ஒன்று, அதற்கு நிறைய பணத்தைச் செலவழிக்க வேண்டி வரும்.

கோவிட் -19 நீடித்தால், விமான நிறுவனங்கள் தங்கள் வணிகத்தைத் தொடரும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும் – அவற்றில் ஒன்று நிறுவனங்களை ‘ஒன்றிணைத்தல்’ என்றார் அவர்.

அந்த வகையில், விமான நிறுவனங்கள் நிலையான செலவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும், விமானத் துறையில் இயக்க செலவினங்களுடன் ஒப்பிடும்போது, நிலையான செலவுகள் அதிகம் என்று அவர் கூறினார்.

“நீங்கள் மீண்டும் கீழே இருந்து தொடங்க விரும்பினால், அது எளிதானது அல்ல. எனவே, எந்த வகையிலாவது, விமானத் துறை உயிர்வாழ நாம் அதை ஆதரிக்க வேண்டும். நாம் நன்மைகளை மட்டும் (தனியாக) பார்க்க முடியாது.

“அரசாங்கம் உதவலாம், ஆனால் அதற்கு நிபந்தனைகள் இருக்கலாம், ஏனென்றால் அனைவருக்கும் உதவ அரசாங்கத்தால் முடியாது. எனவே, இந்த நிறுவனங்கள் முதலில் ஒன்றிணைய வேண்டும், பின்னர் அரசாங்கம் உதவும் என்பதுகூட நிபந்தனையாக இருக்கலாம். ஒரு கூட்டணி இருந்தால், அவர்களால் தொடர்ந்து செயல்பட முடியும், ஏதாவது போதவில்லை என்றால், அரசாங்கம் உதவி செய்யும்.

“அவர்கள் (நிறுவனங்கள்) தங்கள் நிறுவனத்தின் எல்லைக்கு அப்பால் சிந்திக்க வேண்டும், அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ஒன்றிணைவதால், பங்குகள் குறையலாம், ஆனால் நிறுவனங்கள் மூடப்படுவதைவிட இது சிறந்தது, ஏற்றுக்கொள்ளக்கூடியது,” என்று அவர் இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

இப்போதைக்கு, கோவிட் -19 தொற்றுக்குத் தீர்வுகாண – தடுப்பூசி கண்டுபிடித்தல் – அதிக காலம் எடுக்காது என்று விமான நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக சசாலி கூறினார்.

எனவே, அவர்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், கடன் மறுசீரமைப்பு போன்ற குறுகியக் கால கட்டுப்பாட்டுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், அவர்கள் இன்னும் ‘ஒன்றிணைவது’ நோக்கி நகரவில்லை.

இருப்பினும், கோவிட் -19 பாதிப்பு இன்னும் தொடரும் நிலையில், விமானத் துறை சந்தையும் சுருங்கிவருகிறது, குறிப்பாக மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ ஏர் ஆகிய மூன்று விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி வேறு.

நேற்றிரவு, மலிண்டோ ஏர் டுவிட்டரில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் விடைபெறும் போது, ‘வெளியேறுகிறோம்’ (செக்-அவுட்) என்று பதிவு செய்தது மிகப் பிரபலமானது.

மலிண்டோ ஏர் சுமார் 1,000 ஊழியர்களைக் கொண்டு, சிறிய அளவில் மட்டுமே செயல்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், மலேசியா ஏர்லைன்ஸுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அழைப்புவிடுத்த, மலேசியப் பயண மற்றும் சுற்றுலா முகவர்கள் சங்கம் (மாட்டா), விமானத் துறையைச் சுற்றுலாத்துறையின் அடித்தளமாக விவரித்தது. அதுமட்டுமின்றி, விமானத் தொடர்புகள் நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுலா மீட்புக்கு ஒரு முக்கிய அம்சம் என்றும் அது கூறியது.

விமான நிலையங்கள், சாலைகள், இரயில்கள், தங்குமிடம், உணவு, பொழுதுபோக்கு, வணிகம், பொருட்கள் வாங்குதல், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சுற்றுலாத் துறையின் நீண்டகால விநியோகச் சங்கிலியில், விமானத் தொழில்துறை முதல் தொழில்துறை என்றும் அது கூறியது.

இதை ஏற்றுக்கொண்ட சசாலி, விமான நிறுவனங்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, விமான இணைப்பைப் பராமரிப்பது, தொற்றுநோய் தணிந்த பின்னர் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அது உதவும் என்றார்.

“இந்தத் தொற்றுநோய் நீடித்து, அரசாங்கம் உதவி செய்யாவிட்டால், விமான நிறுவனங்களை மூட வேண்டி வரலாம், ஆனால், நம் நாட்டுக்கு விமானங்கள் தேவை.

அவை மூடப்பட்டால், தொற்றுநோய் குறையும் போது, மீண்டும் தொடங்க விரும்பினால், அது அதிக விலை உயர்ந்ததாக இருக்கும், மீண்டும் கட்டமைக்க நினைப்பது மிகவும் கடினம்.

“எனவே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இலாபம் வந்தாலும் வராவிட்டாலும், விமான நிறுவனம் இருக்க வேண்டும். ஆக, மலேசியாவில் ஒரு விமான நிறுவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கத்திற்கு ஒரு வழிகாட்டி (மாதிரி) இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

விமான நிறுவனங்கள் அவற்றின் மூலதனத்தைப் பாதுகாப்பதிலோ அல்லது அவற்றிக்கு மூலதனத்தை வழங்குவதிலோ அரசாங்கம் ஈடுபடாது என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் பலமுறை கூறியுள்ளார்.

மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ ஏர் போன்ற விமான நிறுவனங்கள் தொடர்ந்து தங்களை நிலைத்திருக்கச் செய்யும் முயற்சியில், கடன் மறுசீரமைப்பு மற்றும் பணிநீக்கங்கள் போன்றவற்றைக் கையாள தொடங்கிவிட்டன.

மறுசீரமைப்பு வெற்றிகரமாக இல்லாவிட்டால், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான வாய்ப்பு உண்டு என்பதை கஸானா நேஷனல் பெர்ஹாட் (Khazanah Nasional Bhd) நிராகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஃபயர்ஃபிளை (Firefly) நிறுவனத்தைத் தேசிய விமான நிறுவனமாக மாற்றுவதற்காக நிதி வழங்கவும் அது தயாராக உள்ளது.

தற்போது விமான நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள அதிகக் கடன் மற்றும் செலவுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பொருளாதார வல்லுநர், பேராசிரியர் டாக்டர் பர்ஜோய் பர்தாய், விமான நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டாம் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு “எடுக்கப்பட வேண்டிய ஒரு கட்டாய முடிவு” என்று கருதுகிறார்.

எவ்வாறாயினும், பங்குதாரர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விமான நிறுவனங்களின் நடவடிக்கைகள், ‘ஸீரோ சம் கேம்’ (‘zero sum game’ – ஒரு தரப்பினரின் இலாபம் மற்றொரு தரப்பிற்கு இழப்பு) குறிப்பாக, வருமான மூலத்தை இழந்த ஊழியர்களின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்காது என்று அவர் கூறினார்.

அவர்கள் (முன்னாள் ஊழியர்கள்) வேலையற்றவர்களாக இருப்பார்கள், வேலை இல்லாததால், ​​அவர்கள் பி40 குழுவாக மாறுவார்கள், ஏழை வர்க்கமாக, (இது) கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

“விமான நிறுவனங்களைக் காப்பாற்ற முடியாது என்பது அரசாங்கம் கட்டாயத்தால் எடுத்த முடிவு.

“ஆனால் அதே நேரத்தில், விமானத் துறையிலிருந்த மனிதவளத்தை மற்ற துறைகளுக்கு எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து அரசாங்கம் உடனடியாக சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்த தொழிலாளர்களை 4.0 தொழில்துறை புரட்சியின் வழி, புதிய துறைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.