அந்தோனி லோக் : தாஜுடினுக்குக் குறுகிய அரசியல் பார்வை

பாசீர் சாலாக் எம்.பி., தாஜுட்டின் அப்துல் ரஹ்மான், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்குச் சம ஒதுக்கீடு வழங்குவது, தேசிய முன்னணியைக் கொல்வதற்குச் சமம் என்று கூறியது, அவரின் குறுகிய அரசியல் பார்வையைக் காட்டுகிறது என்று அந்தோனி லோக் கூறியுள்ளார்.

“இன்றைய அரசாங்கம் எந்நேரத்திலும் உடையக்கூடியது, எனவே நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்க வேண்டுமானால், எங்களுக்குள் ஒரு புரிதல் இருக்க வேண்டும். அதை நாம் ஒரு கொள்கையாக மாற்ற வேண்டும்.

“நாளை நாங்கள் (பக்காத்தான் ஹராப்பான்) மீண்டும் வென்றால், எதிர்க்கட்சிக்கு அதே ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

“கொல்லப்படுமா இல்லையா தெரியவில்லை, ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது ஒரு குறுகிய அரசியல் பார்வை,” என்று அவர் டிஏபி முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பேட்டியில் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், ஒவ்வொரு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் RM100,000 ஒதுக்கீடு வழங்கியது, மேலும் அதனைக் கட்டங்கட்டமாக அதிகரிக்க பரிசீலித்து வந்தது என லோக் மேலும் சொன்னார்.

“2018-க்கு முன்னர், எந்த எதிர்க்கட்சி எம்.பி.யும் அரசாங்கத்திடமிருந்து ஒரு சென் கூட பெறவில்லை. ஆனால், பி.எச். அரசாங்கத்தின் கீழ், நாங்கள் அதனை மாற்றி RM100,000 கொடுத்துள்ளோம்.

“அந்த நேரத்தில், நாங்கள் புதிதாகப் (அரசாங்கத்தை) பொறுப்பேற்றோம், அந்த எண்ணிக்கையைக் கட்டங்கட்டமாக அதிகரிக்க நினைத்தோம்.

“இப்போது அவர்களும் எங்களுக்கு RM100,000 திருப்பித் தருகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் பழி வாங்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.