ஓர் அமர்விற்கு 80 எம்.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி

நாடாளுமன்றம் | மேம்படுத்தப்பட்ட கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 222 எம்.பி.க்களில் 80 பேரை மட்டும் ஓர் அமர்வில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை, 2021 வரவுசெலவுத் திட்டத் தாக்கலின் போது இத்தீர்மானம் தொடங்கவுள்ளது.

அந்த 80 எம்.பி.க்களில் அரசாங்கத்தைச் சேர்ந்த 41 பேரும், எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சைகளைச் சேர்ந்த 39 பேரும் அடங்குவர் என்று மக்களவைச் சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமர்வில் பங்கேற்கும் எம்.பி.க்களை அந்தந்த கட்சிகள் தீர்மானிக்கும், மேலும் கலந்துகொள்ளும் நபர்களுக்கு வருகையைப் பதிவு செய்ய சிறப்பு அட்டையும் வழங்கப்படும்.

அந்த அறிக்கையை மக்களவை துணை சபாநாயகர் மொஹமட் ரஷீத் ஹஸ்னோன் இன்றைய அமர்வின் தொடக்கத்தில் வாசித்தார்.

இருப்பினும், வாக்களிக்கும் போது, ​​அனைத்து எம்.பி.க்களும் சபையில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

நேற்று நடைபெற்ற மக்களவை கோவிட் -19 தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்புப் கூட்டத்தில் இந்த நடவடிக்கை முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அஸார் மற்றும் கட்சித் தலைவர்கள் பத்து பேர் கலந்துகொண்டனர்.

தவிர, நாடாளுமன்ற அமர்வு காலை 10 மணி தொடங்கி 2 மணி வரையில் மட்டுமே நடைபெறும் என்றும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2021 வரவு செலவுத் திட்டத்திற்கானக் கொள்கை விவாதம் நவம்பர் 9 முதல் நவம்பர் 19 வரை எட்டு நாட்களுக்கு நடைபெறும் என்று அஸார் கூறினார்.

தேவைப்பட்டால், இந்த முறை மாநாட்டு நாட்களின் எண்ணிக்கையை இரண்டு நாட்களுக்கு (டிசம்பர் 16 & 17) அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.