மரியா சின் : ஆரம்ப வாக்குகள் மற்றும் அஞ்சல் வாக்குகளை இசி முயற்சிக்கலாம்

பத்து சாபி இடைத்தேர்தல் | முன்கூட்டியே வாக்களிப்பதற்கான முன்மொழிவைப் பரிசீலிப்பதோடு, மலேசிய சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய செந்தர இயங்குதல் நடைமுறையில் (எஸ்ஓபி) அஞ்சல் வாக்களிப்பையும் தேர்தல் ஆணையம் (இசி) விரிவுபடுத்த வேண்டும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

சுகாதார அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மூன்று புதிய எஸ்ஓபி-க்களைத் – மாநிலத்தைக் கடக்கக்கூடாது, பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டம் இல்லை, வீடு வீடாக செல்லக்கூடாது – தனது தரப்பு கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது என்ற தேர்தல் ஆணைய இயக்குநர், அப்துல் கானி சாலேவின் அறிக்கையைக் குறிப்பிட்டு மரியா இதைக் கூறினார்.

“ஆரம்ப வாக்களிப்பு மற்றும் அஞ்சல் வாக்களிப்பை விரிவுபடுத்தாமல், மாநில அல்லது மாவட்ட எல்லைகளைக் கடக்கக்கூடாது எனக் கூறுவது பொருத்தமான பரிந்துரை அல்ல, இது மக்களின் உரிமைகளுக்கு முரணானது.

“அரசியலமைப்பின் கீழ், ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு; தேர்தல் சட்டத்தின்படி, யாரையும் ஓர் அஞ்சல் வாக்காளராக அனுமதிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

“மிக உயர்ந்ததொரு தேர்தல் மேலாண்மை நிறுவனம் என்ற வகையில், ஒவ்வொரு வாக்காளரின் வாக்களிக்கும் உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்க வேண்டும்,” என்று மெங்கிபோல் சட்டமன்ற உறுப்பினர் சியூ சோங் சினுடன் ஓர் அறிக்கையில் மரியா தெரிவித்தார்.

அந்த இரண்டு மக்கள் பிரதிநிதிகளும், பத்து சாபி இடைத்தேர்தலில் ஆரம்பகால வாக்களிப்பு மற்றும் அஞ்சல் வாக்களிப்பு முறையைப் பயன்படுத்துவது மிகச் சிறந்த முயற்சி என்றும் கூறியுள்ளனர்.

“ஆரம்பகால வாக்களிப்பு முறையால், மாவட்டத்திற்கு வெளியே, மாநிலத்திற்கு வெளியே, ஏன் வெளிநாட்டிலும் கூட, சிறப்பாக நியமிக்கப்பட்ட உள்ளூர் வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

“இதன் மூலம், வாக்காளருக்கு வாக்களிக்கும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

வீடு வீடாக செல்வது அனுமதிக்கப்படாவிட்டால், தேர்தல் நடைபெறும் நேரத்தில் அரசு மற்றும் தனியார் ஊடகச் சேனல்களுடன், குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியுடன் தேர்தல் ஆணையம் பணியாற்றலாம் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்து, அவர்களின் அரசியல் கருத்துக்களையும் தத்துவங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“இது செயல்படுத்தப்படலாம், ஏனெனில் மத்திய அரசியலமைப்பின் 115-வது பிரிவு அரசாங்க நிறுவனங்களின் உதவியைப் பெறத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் வெளிநாட்டில் வசிப்பதால், வாக்குப்பதிவுகளைப் பெறுவதற்கும் திருப்பி அனுப்புவதற்கும் போதுமான நேரம் இருப்பதை உறுதிசெய்ய, முடிந்தவரை பிரச்சாரக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.