மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இருக்கும் இந்துக்கள் தீபாவளியின் முதல் நாளில் கோயிலில் பிரார்த்தனைகள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதேநேரத்தில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இருப்பவர்கள் கிராமத்திற்குத் திரும்பும் நோக்கத்திற்காக மாவட்டம் அல்லது மாநிலத்தைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மூத்த அமைச்சர் (தற்காப்பு) இஸ்மாயில் சப்ரி, தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் விளக்கக் கூட்டத்திற்குப் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“இன்றைய சிறப்பு அமர்வு, இந்துக்கள் முதல் நாளில் பிரார்த்தனை விழாக்களில் கலந்துகொள்ள அனுமதிக்க ஒப்புக்கொண்டது, ஆனால் இறுக்கமான செந்தர இயங்குதல் நடைமுறையைக் (எஸ்.ஓ.பி.) கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கோயில்களில் எஸ்.ஓ.பி.
கோயில்களில், ஏற்கனவே வழிபாட்டுத் தளங்களுக்காக வெளியிடப்பட்ட எஸ்.ஓ.பி.-க்கு முழுமையாக இணங்க வேண்டும், ஒரே நேரத்தில் 30 பேருக்கு மேல் கோயிலின் உள் இருக்கக்கூடாது, கோயிலின் இட அளவுக்கு ஏற்ப இது அமையலாம். கூடல் இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
பிரார்த்தனைகள் காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணிக்குள், 5 அமர்வுகளாகப் (ஓர் அமர்வு 30 நிமிடங்கள்) பிரிக்கப்பட்டு நடைபெற வேண்டும். புதிய அமர்வைத் தொடங்குவதற்கு முன்பு, 30 நிமிடங்கள் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீடுகளில் கொண்டாட்டம்
மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இருக்கும் தரை வீடுகளில், கொண்டாட்டங்கள், நெருங்கிய குடும்பத்தினருக்குள், ஒரே நேரத்தில் 20 பேருக்கும் மிகாமல் இருக்குமாறு அனுமதிக்கப்படும்.
1,500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்ட அடுக்குமாடி வீடுகளுக்கு ஒரு நேரத்தில் அதிகபட்சம் 10 பேர் அனுமதிக்கப்படுவார்கள், மேலும் 2,500 சதுர அடிக்கு மேல் உள்ள பகுதிக்கு, அதிகபட்சம் 15 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் உள்ள வீடுகளில், பண்டிகை கொண்டாட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும், விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.