மக்களவை புதிய விதிகளின் சூழ்ச்சி என்ன?

விமர்சனம் | கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்க எம்.பி.க்கள் உட்பட நாம் அனைவரும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது உண்மையில் நல்லது.

ஆனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் எனக் குறைக்கப்பட்டு, உறுப்பினர்களின் வருகை 80 பேருக்கு மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டிருப்பது, ஒரு தீவிர நிலையை எட்டியுள்ளதாகத் தெரிகிறது, மேலும் அது அர்த்தமற்றது.

எம்.பி.க்களின் உயிரும் நலனும் மற்றவர்களின் உயிரையும் நலனையும் விட முக்கியமானது என்பது போல் தெரிகிறது. அல்லது இதில் வேறெதுவும் சூழ்ச்சி உள்ளதா?

அரசியல்வாதிகள் மக்களுக்குதான் முன்னுரிமை என்று எப்போதும் கூறுகிறார்கள். ஆனால் இப்போது, ​​தேசியக் கூட்டணியின் அரசாங்கத்தின் கீழ், எம்.பி.க்களின் உயிர் மற்றும் நலன் மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது.

அப்படியானால், மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறை, இராணுவத்தினரின் பணிகாலமும், அனைத்து வகையான அரசு சேவைகளும் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரமும், ஒரு முறைக்கு 80 பேருக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மற்ற ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை விட மக்களவையின் 222 உறுப்பினர்களின் உயிரும் ஆரோக்கியமும் அவ்வளவு முக்கியமானதா? எம்.பி.க்கள் எல்லோரையும் போல மனிதர்கள்தானே?

அரசியல்வாதிகள் எப்போதுமே மக்களுக்காக அவர்கள் தியாகம் செய்கிறார்கள் என்று வாதிடுவதால், அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைக் (எலவன்ஸ்), குறிப்பாக மக்களவைக் கூட்டத்தொடருக்கானக் கொடுப்பனவுகளைக் குறைக்குமாறு நாங்கள் சவால் விடுகிறோம், ஏனென்றால் அவர்கள் எப்போதாவது ஒருமுறைதான் மக்களவையில் இருக்கிறார்கள், அதுவும் நான்கு மணி நேரம் மட்டுமே.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை, சிறுவர்களின் பொம்மை விளையாட்டுப்போல மாற்றும் வகையில், யார் இந்த “புத்திசாலித்தனமான யோசனை” வழங்கியது என்று எனக்குத் தெரியாது.

நம் நாட்டின் மக்கள் தொகை 33 மில்லியன், நவம்பர் 4-ஆம் தேதி நிலவரப்படி 35,425 கோவிட் -19 தொற்றுகள் நாட்டில் பதிவாகியுள்ளன.

மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த தொற்றுநோயைக் கொண்ட நாடுகளில் நம் நாடும் ஒன்றாகும்.

எனவே, மக்களவையின் செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் தியாகம் செய்யும் அளவுக்கு பீதியடைய எந்தக் காரணமும் இல்லை.

நாடாளுமன்றத்தில் இவ்வாறான அசாதாரண விதிகளை அமல்படுத்தியதன் பின்னணியில் உள்நோக்கம் எதுவும் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நிலையற்றதன்மை மற்றும் பல அவநம்பிக்கை தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மறைமுகமான சூழ்ச்சி ஏதும் உண்டா என்று தெரியவில்லை.


ஏ காதீர் ஜாசின் மூத்தப் பத்திரிகையாளர் மற்றும் டாக்டர் மகாதீரின் ஊடக ஆலோசகராக இருந்துள்ளார். அவரது முகநூல் பதிவு இது.