பட்ஜெட் 2021-ல் அதிருப்தி, பேருந்து உரிமையாளர்கள் காவல்துறையில் புகார்

2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக, பிரதமர் இலாகா (ஜேபிஎம்) உட்பட பல அமைச்சுகள் மீது  கெமிலாங் மலேசியப் பயண நிறுவனம் & பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (ஜிஏபிபி பஸ் மலேசியா) காவல்துறையில் புகார் செய்துள்ளது

வரவு செலவு திட்டம், கோவிட் -19 பெருந்தொற்றால் பாதிப்புற்றிருக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளருக்குப் பயனளிக்கவில்லை என்றும், அது தங்கள் உரிமைகளைக் கோரத் தவறியதாகவும் கூறி, நேற்று, புத்ராஜெயா காவல் தலைமையகத்தில் அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் அளித்துள்ளது.

இது 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான முதல் போலிஸ் புகார் என்று கூறப்படுகிறது.

கோவிட் -19 தொற்றுநோயால், பிப்ரவரி முதல் வருமான ஆதாரத்தை இழந்த, நாடு முழுவதும் உள்ள 6,800-க்கும் மேற்பட்ட சுற்றுலா பேருந்து உரிமையாளர்களுக்கு உதவுமாறு தனது தரப்பினர் முன்வைத்தக் கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுத்ததாக ஜிஏபிபி பஸ் மலேசியா தலைவர் அப்துல் அஜீஸ் இஸ்மாயில் கானி கூறினார்.

“மே 2020 முதல், பிரதமர் அலுவலகம் மற்றும் பல அமைச்சுகளுக்கும் சென்று நாங்கள் இதுதொடர்பான கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளோம், வாடகை கொள்முதல் சட்டம் 1967-ன் கீழ், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும் என கடன் நிறுவனங்களுக்கு  (Finance Company) அறிவுறுத்துமாறு அதில் கூறியிருதோம்,” என்று  அஜீஸ் தெரிவித்தார்.

“பிரதமர் அலுவலகம், போக்குவரத்து அமைச்சு, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, உள்துறை அமைச்சு, அரசு மற்றும் உள்ளூர் வீட்டுவசதி அமைச்சு, மனிதவள அமைச்சு மற்றும் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு என எல்லா துறைகளையும் நாங்கள் நாடினோம், ஆனால் எந்தவொரு பதிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

“2021 பட்ஜெட்டை உருவாக்கும் முன், இந்த பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் எங்களுடன் கலந்துரையாடி இருக்க வேண்டும்,” என்று அஜீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜிஏபிபி பஸ் மலேசியா நவம்பர் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2021 பட்ஜெட்டில், தேசியக் கூட்டணி அரசாங்கத்திடம் மூன்று கோரிக்கைகளை (https://malaysiaindru.my/186887) முன்வைத்துள்ளது.

2021 பட்ஜெட் தங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளாக பார்க்கிறது என்று அஜீஸ் கூறினார்.

“சுற்றுலாத்துறையில், நாங்கள் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த வருமானத்தை வழங்கியிருந்தாலும், எங்களை அரசாங்கம் புறக்கணிக்கப்பதாக நாங்கள் உணர்கிறோம்.

“புதியப் பேருந்துகளை வாங்குவதற்காக வழங்கப்படும் வரி விலக்கு, தற்போது பயனளிக்காது, ஏனெனில் தற்போதுள்ள பேருந்து தவணை பணத்தையே எங்களால் செலுத்த முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

அவர்களின் குரல்கள் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கத் தவறினால், ஜிஏபிபி பஸ் மலேசியா ஆர்ப்பாட்டத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.