நாட்டில், இன்று நண்பகல் வரையில், 869 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 6 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆறு இறப்புகளும் சபாவில் பதிவாகியுள்ளன. ஆக, நாட்டில் இதுவரையில் மொத்தம் 300 பேர் இந்தக் கொடிய நோய்க்குப் பலியாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அவசரப் பிரிவில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று 725 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாக டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.
397 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது
சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 236, நெகிரி செம்பிலானில் 141, பினாங்கில் 27, கோலாலம்பூரில் 19, பேராக்கில் 12, கிளந்தானில் 9, லாபுவான் மற்றும் ஜொகூரில் 8, சரவாக்கில் 6, கெடா மற்றும் புத்ராஜெயாவில் 3.
மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
அவை, லியாவான் திரளை – சபா, கெனிங்காவ் மாவட்டம், தாதாஹான் திரளை – சபா, கோத்தா கினாபாலு மாவட்டம், ஜிகே தாவாவ் திரளை – சபா, தாவாவ் மாவட்டம், கியூப் திரளை – கிளாந்தான், கோத்தா பாரு & தானா மேரா மாவட்டம்.