முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமட் தனது ஓய்வூதியத்தில் 10 விழுக்காட்டைக் குறைக்கத் தயாராக இருக்கிறார், இது வருமான ஆதாரத்தை இழந்தவர்களுக்கு உதவப் பயன்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்கள் 10 விழுக்காடு சம்பளத்தைக் கொடுக்கலாம் என்று, நேற்று அவர் முன்வைத்த திட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“எனது ஓய்வூதியத்தில் 10 விழுக்காட்டைக் கழிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால், அது வருமான ஆதாரத்தை முழுவதுமாக இழந்தவர்களின் சுமையைக் குறைக்க பயன்பட வேண்டும்.
“இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் செந்தர இயக்க நடைமுறைகளால் (எஸ்ஓபி) எனது வாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று அவர் தனது முகநூலில் வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஊதியம்) சட்டம் 1980-ன் கீழ், முன்னாள் பிரதமர் உட்பட முன்னாள் எம்.பி.க்கள், குறைந்தது 36 மாதங்களுக்குப் பின் சேவை நிறுத்தப்பட்டால், அவர்கள் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.
ஓய்வூதியத்தின் அளவு, சேவையின் நீளம் மற்றும் அந்த நேரத்தில் பெறப்பட்ட சம்பளத்தைப் பொறுத்தது.
அவர் பிரதமராக இருந்தபோது, தனக்கும், அமைச்சர்களுக்கும், துணை அமைச்சர்களுக்கும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் 10 விழுக்காடு ஊதியக் குறைப்பை முன்மொழிவது இயல்பு என்று மகாதீர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“இப்போது, சம்பளம் முன்பைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. பலர் வருமானத்தை இழந்தாலும், அரசாங்கத்தில் சம்பாதிப்பவர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் கூட சம்பளத்திற்குப் பஞ்சமில்லை.
“அதிர்ஷ்டசாலி மற்றும் துரதிர்ஷ்டவசமானவர்களுக்கு இடையேயான தூரத்தைக் குறைக்க, பாதுகாப்பு அற்றவர்களுக்கு உதவ, பாதுகாப்பாக இருப்பவர்களின் சம்பளத்தில் 10 விழுக்காட்டை வெட்டுவது நியாயமானதுதானே,” என்று அவர் கூறினார்.