தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை, நிதியமைச்சர் ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் விரைவில் அறிவிப்பார் என்று மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் கூறினார்.
தேசிய வகைப் பள்ளிகள், மிஷனரி மற்றும் மதப் பள்ளிகளுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகளை அறிவிக்காத ஜஃப்ருலின் நடவடிக்கை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட, சீன, இந்தியச் சமூகத் தலைவர்களின் விமர்சனங்களை அடுத்து இந்தத் தகவல் வந்துள்ளது.
“தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக நான் தெங்கு ஜஃப்ருல் மற்றும் கல்வி அமைச்சர் (மொஹமட் ராட்ஸி ஜிடின்) ஆகியோருடன் கலந்துரையாடினேன். விரைவில் ஓர் அறிவிப்பு வரும்,” என்று, இன்று கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாராவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இதுபற்றிய மேல் விவரங்கள் பெற, நிதியமைச்சரை மலேசியாகினி தொடர்புகொள்ள முயன்று வருகிறது.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு RM800 மில்லியன் வழங்கப்படுவதாக பட்ஜெட்டில் அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகளில், வசதியான மற்றும் பாதுகாப்பான ஒன்றுகூடும் மண்டபங்களை மேம்படுத்துதல் மற்றும் கட்டமைத்தல் ஆகியவையும் இந்த ஏற்பாட்டில் அடங்கும்.
இருப்பினும், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் காலத்திலிருந்தே, நடைமுறையில் இருந்த தேசிய வகைப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகள், இம்முறை இல்லை என்று பல எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத் தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“அரசாங்கத்தில், இந்தியச் சமூகத்தின் பிரதிநிதியான நான் இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டை விரைவில் பெறுவதை உறுதி செய்வேன்.
“அதே நேரத்தில், தேசிய வகைப்பள்ளிகள் இன்றைய அரசாங்கத்தால் ஓரங்கட்டப்படாது என்றும் நான் உறுதி கூறுகிறேன்,” என்று அவர் கூறினார்.