கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு செலவு திட்டத்தில், தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டதை, தேசியக் கூட்டணி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 50 மில்லியன் ரிங்கிட் வரை ஒதுக்கப்பட்ட வேளையில், அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு அறவே நிதி ஒதுக்கப்படாதது மலேசியத் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் தாய்மொழி பள்ளிகள் காக்கப்பட வேண்டும் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், தற்போது அதன் வளர்ச்சிக்கு அரசு உதவாதது வேதனையை அளிக்கிறது என அவர் மேலும் சொன்னார்.
“தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டியது அத்தியாவசியமானது.
“காரணம், நாட்டில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளில் அரசு முழு உதவி பெற்ற பள்ளிகளும் பகுதி உதவி பெறும் பள்ளிகளும் இருக்கின்றன. அரசு முழு உதவி பெற்ற பள்ளிகளின் தேவையை அரசு பார்த்துகொள்ளும். ஆனால், பகுதி உதவிபெறும் பள்ளிகளின் நிலம், கட்டிடம், சீரமைப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இந்த சிறப்பு நிதி ஒதுக்கீடு அவசியமாகும்,” என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, பி40 எனும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளே தமிழ்ப்பள்ளிகளில் பெரும்பாலும் பயில்கிறார்கள். அப்படியிருக்க, அந்தந்தப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் மேன்மைக்கும் தமிழ்ப் பள்ளிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு மிக மிக அவசியமானது என்று அவர் விளக்கப்படுத்தினார்.
“பகுதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு பாலர் பள்ளியை அமைத்து கொடுக்காது. ஆகையால், பாலர் பள்ளி அமைத்து கொள்வதற்கும் அதை நிர்வகிப்பதற்கும் இந்தச் சிறப்பு நிதி அத்தியாவசியமானது.
“அதோடு, அனைத்து தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளியை உறுதி செய்வதே, பி40 நிலை மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்,” என்றும் இன்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
தாய்மொழி கல்வி, பள்ளி, வளர்ச்சி என்பது அனைவரின் உரிமை என்பதால், வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டியது அரசின் கடமை.
அதில் பாரபட்சம் பார்த்து புறக்கணிப்பது, மிகப்பெரிய தீமை என்ற அவர், அந்த உரிமைக்காக நாளும் போராட வைத்து வஞ்சிப்பது கொடுமை என்றார்.
“எனவே, 2021 வரவு செலவுத் திட்டத்தில், தமிழ்ப்பள்ளிக்கான வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டில் முந்திய அரசைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு நிதியை அரசு ஒதுக்கீடு செய்யப் பரிசீலிக்க வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கோரிக்கை வைக்கிறது,” எனப் பாலமுருகன் வீராசாமி கேட்டுக்கொண்டார்.