2020 பள்ளி அமர்வு சுருக்கப்பட்டதால், மாணவர்கள் அடுத்த ஆண்டு வகுப்பிற்குச் செல்லக்கூடாது என்ற திட்டம் பொருந்தாது என்று மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவை சங்கம் (என்.யூ.தி.பி.) தெரிவித்துள்ளது.
இது நடந்தால், அது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் என்று என்.யூ.தி.பி. தலைவர் அமினுதீன் அவாங் கூறினார்.
“அவர்களை அடுத்த வகுப்புக்குச் செல்லவிடாமல் தடுப்பது மிகவும் பொருத்தமற்றது. அடுத்த ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், அந்த ஆறு வயது (இப்போது) குழந்தைகளின் நிலை என்ன? பாலர்பள்ளி மாணவர்களைப் அங்கேயே வைத்துகொள்ள முடியுமா?
“அப்படி ஒருவேளை நடந்தால் அது மாணவர் எண்ணிகையை இரட்டிப்பாகும், ஒரு வகுப்பறையில் ஒரு கற்றல் அமர்வுக்கான வலிமை என்ன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
“இந்த ஆண்டு படிவம் ஐந்து கற்றலை அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடர, கல்வியமைச்சு இரண்டாம், மூன்றாம் படிவ மாணவர்களின் சேர்க்கையை நிறுத்த வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறது,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்
கோவிட் -19 பெரும்பிணியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி அட்டவணை காரணமாக, பள்ளி மாணவர்கள் 2021-ல், அடுத்த வகுப்பிற்குச் செல்லக்கூடாது என்ற பரிந்துரைகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன.
கடந்த நவம்பர் 8-ம் தேதி, தீபகற்பத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) அமல்படுத்துவதால், அடுத்த ஆண்டு ஜனவரி வரை கல்வியமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று மூத்த அமைச்சர் (கல்வி) டாக்டர் ராட்ஸி ஜிடின் அறிவித்தார்.
எனவே, அடுத்த ஆண்டு, பள்ளிகள் ஜனவரி 20, புதன்கிழமை அன்றே தொடங்கும்.
அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களும் அந்தத் தேதியில் பள்ளி அமர்வை நேருக்கு நேர் கற்றல் வழி தொடங்குவார்கள்.
இடைநிலைப் பள்ளிகளும், படிவம் 1, 4, 5, மற்றும் 6 மாணவர்கள் உட்பட, அனைத்துத் தொழிற்கல்வி கல்லூரி மாணவர்களும் அதேத் தேதியில் பள்ளி செல்ல தொடங்குவார்கள் என்றும் அவர் சொன்னார்.
அதேவேளை, படிவம் 2 மற்றும் 3 மாணவர்கள், அந்தத் தேதியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப இல்லமிருந்து கற்றல் மூலம் பள்ளி அமர்வைத் தொடங்குவார்கள். அவர்கள் மார்ச் 8, 2021 அன்று, நேருக்கு நேர் கற்றல் அமர்வுக்காகப் பள்ளிக்குத் திரும்புவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள இல்லமிருந்து கற்றல் அடிப்படையிலான கற்றல் முறையை மதிப்பீடு செய்ய என்.யூ.தி.பி.-ஆல் முடியவில்லை என்று அமினுதீன் கூறினார்.
நேருக்கு நேர் கல்வி முறையை இல்லமிருந்து கற்றல் அடிப்படையிலான கற்றலில் இருந்து வேறுபடுத்துவது அர்த்தமல்ல என்று அவர் கூறினார்.
“இது புதிய அணுகுமுறை, அதன் செயல்திறனை மதிப்பீடு செய்ய முடியவில்லை.
“ஆனால், கோவிட் -19 காரணமாக நமக்கு வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில், இல்லமிருந்து கற்றலுடன் நேருக்கு நேர் கற்றல் முறையைப் போட்டிபோட செய்வது நியாயமற்றது.
“இந்தக் கற்றல் முறை பயனுள்ளதாக இல்லை என்று நினைத்தால், இந்தக் கோவிட் -19 சூழ்நிலையில், பள்ளியை மீண்டும் திறக்க நாம் விரும்புகிறோமா? நிச்சயமாக இல்லை.
“தற்போது செய்ய வேண்டியது, பலவீனங்களை மேம்படுத்துவதாகும்,” என்று அவர் கூறினார்.