அஸலினாவின் தீர்ப்பை ‘முட்டாள்தனம்’ என்று விவரித்தார், கெப்போங் எம்.பி. 5 நாட்களுக்கு முன்பு இடைநீக்கம்

அவைத் தலைவர் அஸார் அஸீஸான் ஹருனுக்கும் இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே நடந்த தகராறின் காரணமாக மக்களவையில் குழப்பம் ஏற்பட்டது.

நேற்று, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவை அவமதித்ததாகக் கூறப்படும் பிந்துலு எம்.பி. தியோங் கிங் சிங்கின் அறிக்கை தொடர்பாக, அவையின் துணைத் தலைவர் அஸாலினா ஒத்மான் சைட் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு, பாகான் எம்பி லிம் குவான் எங் அஸாரிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து இது தொடங்கியது.

மன்னிப்பு கேட்க தியோங்கை வலியுறுத்துமாறு ஜெலூத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயரின் முன்மொழிவை குவான் எங் நேற்று மீண்டும் வலியுறுத்தினார், ஆனால் அஸார் அஸலினா ஏற்கனவே முடிவு எடுத்துள்ளார், அவர் முடிவை மாற்றுவது “நல்லதல்ல” என்று கூறிவிட்டார்.

ஆனால் கெப்போங் எம்பி லிம் லிப் எங், அஸாலினா அளித்த தீர்ப்பு “முட்டாள்தனம்” -ஆனது என்று கூறினார்.

இதனால் கோபமடைந்த அஸார், லிப் எங்-ஐ மக்களவையை விட்டு வெளியேறுமாறும், அவரை இரண்டு நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதாகவும் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, லிப் எங் வெளியேற மறுத்ததையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் அசார் லிப் எங்கை ஐந்து நாட்கள் இடைநீக்கம் செய்வதாகவும் மேலும், அவர் வெளியேற மறுத்தால் காவல்துறையினரை அழைக்கப்போவதாகவும் மிரட்டினார்.

நேற்று, கோவிட் -19 தொற்றுநோயைக் கண்காணிக்க, சபாவுக்கு நூர் ஹிஷாம் வரவில்லை, அவர் “இறப்பதற்கு பயப்படுகிறார்” என்று விவரித்த பிந்துலு எம்.பி.யின் அறிக்கையைத் தொடர்ந்து, மக்களவையில் இந்த வாய்ச்சண்டை ஏற்பட்டது.

அதனையடுத்து, அஸலினா, தியோங் தனது கூற்றைத் திரும்பப் பெற வேண்டும்  அல்லது அவர் சொன்னதை விளக்க வேண்டும் என இரண்டு தேர்வுகளை தியோங்கிற்குக் கொடுத்தார்.

இருப்பினும், தியோங் தனது கூற்றைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.

“இது முன்னிலை ஊழியர்களின் கேள்வி, எனவே நான் திரும்பப் பெற விரும்பவில்லை. எப்போதும் (நூர் ஹிஷாம்) அவர் மற்றவர்களையே அனுப்புகிறார். அவரும் அங்குச் செல்ல வேண்டும்,” என்றார் தியோங்.

நேற்று, சபா மாநிலத் தேர்தலின் போது, சபாவில் உள்ள மலேசிய சுகாதார அமைச்சின் உறுப்பினர்கள் எவ்வாறு தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் களத்தில் இறங்கியதாக டாக்டர் நூர் ஹிஷாம் விளக்கினார்.

தியோங் கூறியது போல், மரண பயம் குறித்த பிரச்சினைகள் எதுவும் எழவில்லை என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.