சீன, இந்திய மாணவர்களில் 7 %-க்கும் குறைவானவர்களே தேசியப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர்

மக்களவை | கல்வி அமைச்சின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், தேசியப் பள்ளிகளில், சீன மற்றும் இந்திய மாணவர்களின் பங்களிப்பு, 2010 முதல் 2020 வரையில் குறைந்துள்ளதாகவும், ஆனால் மலாய்க்காரர்களின் பங்களிப்பு நிலையானதாக இருப்பதாகவும் தெரிகிறது.

மலாய் மாணவர்களின் பங்கேற்பு “சுமார் 93 விழுக்காட்டில் இருந்து 94 விழுக்காடு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது பெரும்பான்மை பதிவாகும்.

“சீன மாணவர்களின் பங்கேற்பு, 2010-ல் 1.17 விழுக்காட்டில் இருந்து 2020-ல் 0.73 விழுக்காடாகக் குறைந்து வருவதைக் காட்டுகிறது.

“இந்திய மாணவர்களின் பங்கேற்பின் விழுக்காடும், இதேக் காலகட்டத்தில் 3.15 விழுக்காட்டிலிருந்து 2.63 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

“தவிர, மற்ற இனங்களைப் பொறுத்தவரை, 2010-ல் 2.00 விழுக்காட்டிலிருந்து 2020- ல் 2.84 விழுக்காடாக, இலேசான அதிகரிப்பு உள்ளது,” என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின், செத்தியாவாங்சா எம்.பி. நிக் நஸ்மி நிக் அஹ்மதிற்கு எழுதிய நாடாளுமன்றப் பதிலில் தெரிவித்தார்.

2010-லிருந்து 2020-க்கு இடையில், தேசியப் பள்ளிகள், சீன மற்றும் தமிழ் தேசிய வகைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை இன வாரியாக தெரிவிக்குமாறு அந்தப் பி.கே.ஆர். தலைவர் அமைச்சரிடம் கேட்டார்.

இருப்பினும், மலாய் அல்லாத பூமிபுத்ரா மாணவர்களின் குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் பெரும்பாலான சீன மாணவர்கள் பயில்வது தெரியவந்துள்ளது.

“தனியார் பள்ளிகளில், 2020-ம் ஆண்டிற்கான மிகப்பெரியப் பங்கேற்பாளர்களாக சீன மாணவர்கள் உள்ளனர், அவர்கள் 65.88 விழுக்காடு, சபா மற்றும் சரவாக் பூமிபுத்ரா உள்ளிட்ட மலாய்க்காரர்கள் 26.96 விழுக்காடும், 4.00 விழுக்காடு இந்தியர்களும், பிற இனங்கள் 3.17 விழுக்காடும் உள்ளனர்.

“மலாய் மாணவர்களின் பங்கேற்பு 0.65 விழுக்காடு அதிகரித்துள்ள வேளை, சீனர்கள் 0.44 விழுக்காடு சரிவு கண்டுள்ள நிலையில், 2019-உடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனப் பள்ளிகள் கடந்த பத்தாண்டுகளில் சீனரல்லாதப் பெற்றோர்களிடையே, குறிப்பாக மலாய் பெற்றோர்களிடையேப் பிரபலமடைந்து வருவதாகவும் தரவு காட்டுகிறது.

சீனப் பள்ளிகளில், மலாய் மாணவர் சேர்க்கை 2010 முதல் 2020 வரை 6.18 விழுக்காடு உயர்ந்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் உள்ள சீனப் பள்ளிகளில் சுமார் 15 விழுக்காடு மலாய் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய மாணவர் சேர்க்கை 1.08 விழுக்காடும், “பிற இன” மாணவர்கள் எண்ணிக்கை, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 0.65 விழுக்காடு உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்ப்பள்ளிகளின் போக்கில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 99 விழுக்காடு இந்திய மாணவர்கள் பயின்று வருவதாகத் தரவுகள் கூறுகின்றன.