நேர்காணல் | ஓர் அரசியல் கட்சியில் சேரலாமா இல்லையா என்பதை வெளிப்படுத்த மறுத்த போதிலும், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து தனக்குப் பல அழைப்புகள் வருவதாக, சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக் கூறினார்.
“நான் நினைக்கிறேன் அனைவரிடம் இருந்தும் (அரசியல் கட்சிகளின்) அழைப்பு வந்துவிட்டது. எனக்கு அழைப்பு விடுக்காத கட்சிகள் மசீச, மஇகா மட்டும்தான்.
“மசீச , மஇகா-விலிருந்து இன்னும் அழைப்பு வரவில்லை, சரவாக் கட்சிகளிடலிருந்தும், ஏன் என்றால் நான் சரவாக் மக்களின் பிரதிநிதியாக முடியாது அல்லவா?” என்று அவர் அண்மையில், சைபர்ஜெயாவில் உள்ள ‘கல்வி புத்துணர்ச்சி அமைப்பு’-ல் (Pertubuhan Rejuvenasi Pendidikan), மலேசியாகினிக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் கூறினார்.
எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேர அழைப்பு வந்ததா என்று கேட்டபோது அவர் அவ்வாறு கூறினார்.
இருப்பினும், அந்த அழைப்புகள் தீவிரமானதா இல்லையா என்பது அவருக்குத் தெரியவில்லை என்றார்.
கடந்த பொதுத்தேர்தலில், பெர்சத்து சார்பில் போட்டியிட்டு மஸ்லீ வென்றார். ஷெரட்டன் நடவடிக்கைக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. பெர்சத்து பி.எச்.-லிருந்து விலகியதைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நெருக்கடியில் முஹைதீன் யாசினுக்கு ஆதரவளித்த எம்.பி.-க்களில் மஸ்லியும் ஒருவர்.
சிறிது காலத்திற்குப் பிறகு, புதிய அரசாங்கத்தை அமைக்க, முஹைதீன் அம்னோ தலைவர்களுடன் ஒத்துழைக்க எண்ணியபோது, அதில் விருப்பம் இல்லாமல் மஸ்லி ஒரு யு-டர்ன் அடித்தார்.
பின்னர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தலைமையில், பெஜுவாங் கட்சியில் சேர்ந்தார். இருப்பினும், பின்னர் பெஜுவாங் கட்சி ஆதரவாளர் குழுவிலிருந்தும் அவர் விலகினார்.
பெர்சத்து, பெஜுவாங் கட்சிகளில் இணைந்ததற்கு வருத்தப்படவில்லை
இருப்பினும், பெர்சத்து மற்றும் பெஜுவாங்கில் இணைந்ததற்கு வருத்தப்படவில்லை, ஏனெனில் அது ஒரு மதிப்புமிக்க அனுபவம் என்று நினைப்பதாக அந்த முன்னாள் கல்வியமைச்சர் சொன்னார்.
“நமது வாழ்க்கையில் எதுவும் வீண் இல்லை. நாம் செய்யும் விஷயங்களில் வெற்றிபெறும் விஷயங்கள் சில உள்ளன, நாம் விரும்பி செய்யும் விஷயங்கள் சில உள்ளன, நாம் விரும்பாத சில விஷயங்களையும் சில சமயங்களில் செய்ய வேண்டிவரும்.
“அதற்காக நாம் வருத்தப்பட முடியாது, பயனற்றதாக உணர முடியாது. எல்லாவற்றிற்கும் படிப்பினைகள், அனுபவங்கள் உள்ளன, அதைவிட முக்கியமாக அது வாழ்க்கையில் நம்மை முதிர்ச்சியடையச் செய்யும்,” என்று அவர் கூறினார்.
சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளரான மஸ்லி, தனது எதிர்கால அரசியல் திசையைப் பற்றி கேட்டபோது மிகவும் இரகசியம் காத்தார், குறிப்பாக, அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து.
தற்போதைக்கு, சிம்பாங் ரெங்காம் மக்களுக்குச் சேவையாற்றவும், கல்வி தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தவும் விரும்புவதாக அவர் பதிலளித்தார்.
“இந்த நேரத்தில் மிக முக்கியமானது என்னவென்றால், கடந்த 14-வது பொதுத் தேர்தலின் போது, என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்குப் பாத்திரமாக என்னால் எவ்வளவு தூரம் இருக்க முடியும் என்பது பற்றி முழுமையாக சிந்தித்து, செயல்பட விரும்புகிறேன்.
“நான் அத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சராக இருந்தேன்; நான் ஓர் அமைச்சராக இல்லாமல், அரசாங்கத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக இருந்தேன்; நான் அதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி பிரதிநிதியாக ஆனேன், இப்போது நான் அந்தத் தொகுதியில், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, சுயேட்சையாக இருக்கிறேன்.
“என்னைப் பொறுத்தவரை, நான் எங்கிருந்தாலும், சிம்பாங் ரெங்காமில் உள்ள மக்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன், எனது ஆற்றலை சிந்துவேன். இறுதியில், அவர்கள் முடிவு செய்வார்கள்,” என்று அவர் கூறினார்.
அன்வர் குறித்த துணை ஆவணங்களின் ஊகம்
பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கு, ஓர் அதரவு ஆவணத்தை விநியோகித்தது தொடர்பான சர்ச்சையில் மஸ்லீ முன்பு தொடர்புபடுத்தப்பட்டார்.
அன்வரை பிரதமராக ஆதரிப்பதற்காக மஸ்லீ கையெழுத்திட்டதாகக் கூறப்படும் வாக்குமூலம் (எஸ்டி) நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பரவலாக இருந்தது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, மஸ்லீ நேரடியாகப் பதிலளிக்க மறுத்த மஸ்லி, கல்வி பிரச்சினைகள் மற்றும் அவரது பகுதியில் வசிப்பவர்கள் மீதான தனது கவனத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், பி.கே.ஆர். அவர் இணைவதற்குச் சிறந்த அரசியல் கட்சியா என்று கேட்டபோது, ஒரு கட்சியில் சேர்வதற்காக, கட்சிகளுக்கு இடையில் ஒப்பிட்டுப் பார்ப்பது நியாயமில்லை என்று தான் நினைப்பதாக அவர் கூறினார்.
“நாம் பல சுவாரஸ்யமான கட்சிகளைக் கொண்டுள்ளோம், அக்கட்சிகளுக்கு அவரவர் பலங்களும் பலவீனங்களும் உள்ளன,” என்று அவர் கூறினார்.
“… இந்தக் கட்சி, மற்றவற்றைவிட சிறந்தது என்று நான் சொல்வது நியாயமில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பெஜுவாங்கிலிருந்து விலகிய பின்னர், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக டிஏபி, அமானா மற்றும் பாஸ் கட்சியில் மஸ்லி இணைவார் என்று ஆருடங்கள் எழுந்ததைப் பற்றியும் மஸ்லி பேசினார்.
“நான் அம்னோவில் சேர வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
“எனவே, அவையெல்லாம் ஊகம் … மக்களை மகிழ்விக்கும் விஷயங்களின் ஒரு பகுதி அது
“எனவே, அனைவரின் கற்பனையையும் என்னால் தடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.