‘இருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதி’, விதிகளை மறுஆய்வு செய்ய மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்து

சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், வீடுகளை விட்டு வெளியேறும் தனிநபர்களின் நடமாட்டம் தொடர்பான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி.) நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

முக்கியமாக, ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேருக்கு மேல் வெளியேறுவதைத் தடைசெய்யும் ஒரு விதியும் இரண்டு நபர்கள் ஒரு நேரத்தில் ஒரே வாகனத்தில் பயணம் செய்ய அனுமதிக்கும் விதியும் அடங்கும்.

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர், ஆர்.ராஜீவ், இந்த விதி வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த நான்கு பேரை உணவகத்தில் ஒன்றாகச் சாப்பிட அனுமதிக்கிறது என்றார்.

“வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த நான்கு பேர் உணவகத்தில் ஒன்றாகச் சாப்பிடலாம். ஆனால், ஒரே வீட்டிலிருந்து இரண்டு பேர் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

“ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களுக்குதான் இது எளிதில் பாதிப்பை ஏற்படுத்துமா? உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இது எப்படி கோவிட்-19 தொற்றிலிருந்து தற்காத்துகொள்ள உதவும்?

“தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செந்தர இயங்குதல் நடைமுறை (எஸ்ஓபி) அர்த்தமற்றதாக இருக்கிறது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

நேற்று, செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ’வும் ஒரு காரில் இரண்டு பயணிகளை மட்டுமே அனுமதிக்கும் எஸ்ஓபி-யை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“ஒரு காரில் இரண்டு பேரை மட்டுமே அனுமதிக்கும் எஸ்ஓபி-யை மறுபரிசீலனை செய்ய தேசியப் பாதுகாப்பு மன்றத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக காரில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். தயவு செய்து கருத்தில் கொள்ளுங்கள்.

“பல ஒற்றை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியே செல்ல முடியாது,” என்று அவர் தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளார்.

பல கீச்சகப் பயனர்களும், அரசாங்கத்தின் இந்த எஸ்ஓபி குறித்து தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.