நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,304 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 900 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பதிவான புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சபாவில் பதிவான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இன்று, கிள்ளான் பள்ளத்தாக்கில், புதிய பாதிப்புகள் 43.2 விழுக்காடு பதிவான நிலையில், சபாவில் 42.6 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
கோவிட் -19 மூன்றாவது அலையில், அண்மையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக சபா இருந்தது.
ஆனால், நவம்பர் 9 தொடக்கம், தீபகற்ப மலேசியாவில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது எனச் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்று, சபா, துவாரான் மருத்துவமனையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர் 70 வயது முதியவர். சபாவில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை இப்போது 166-ஆக உள்ளது, இது நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் (304), 54.61 விழுக்காடு.
அவசரப் பிரிவில் 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 39 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
திரெங்கானு, பஹாங் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சபாவில் 556, சிலாங்கூரில் 364, கோலாலம்பூரில் 202, நெகிரி செம்பிலானில் 83, பினாங்கில் 42, மலாக்கா, சரவாக் மற்றும் பேராக்கில் 13, கெடா மற்றும் கிளந்தானில் 5, லாபுவானில் 4, ஜொகூரில் 3, மற்றும் புத்ராஜெயாவில் 1.
மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
பொங்காயா திரளை – சபா, சண்டக்கான் மாவட்டம், ஜம்பாத்தான் பி திரளை – சபா, சண்டக்கான் மாவட்டம், ஏபெல் திரளை – சரவாக், கூச்சில் வட்டாரம், பி.எம்.யூ. திரளை – மலாக்கா, ஜாசின் வட்டாரம்.