‘குற்றஞ்சாட்டப்படாமல், தடுத்து வைத்திருக்கும் 25 பேரையும் விடுதலை செய்க’ – போலிசுக்கு வலியுறுத்து

நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாமல், சுமார் ஒரு மாத காலமாக தடுத்து வைத்திருக்கும் 25 பேரை விடுவிக்குமாறு, கிள்ளான் எம்பி சார்லஸ் சந்தியாகோ போலிசாரை வலியுறுத்தினார்.

அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் பலமுறை உத்தரவிட்டும், காவல்துறையினர் ரிமாண்ட் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்தி, நீதிமன்றத்தை அவமதிப்பதாக மனித உரிமை தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘சுவாராம்’ கூறியுள்ளது.

ஆயினும், கடந்த செப்டம்பரில், பந்திங்கில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குக் காரணம் என்று நம்பப்படும் திசிபி 21 குழுவின் உறுப்பினர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, இரண்டு நீதிபதிகள் ரிமாண்ட் உத்தரவு கோரியதை நிராகரித்த போதிலும், காவல்துறையினர் அவர்களைக் காவலில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டதாக சந்தியாகோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் சமீபத்தில் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு பொலிசார் இணங்க மறுக்கின்றனர்.

“செய்யாதப் பல்வேறு குற்றச் செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் மீது இதுவரை குற்றஞ்சாட்டப்படவில்லை,” என்று சந்தியாகோ கூறினார்.

செப்டம்பர் 25-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவர்கள் ஆரம்பத்தில் விசாரிக்கப்பட்டனர், இது ஒரு வர்த்தகர் மற்றும் அவரது மெய்க்காப்பாளர் தெலுக் டத்தோ இடைநிலைப் பள்ளி அருகில் பல முறை சுடப்பட்டுக் கொல்லப்பட்டது தொடர்பானது.

இதில், அப்பள்ளியின் சில மாணவர்களும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது அவர்களை 2016 மற்றும் 2018-ல் நடந்த கொலை வழக்குகளுடன் சம்பந்தப்படுத்தி, குற்றத் தடுப்புச் சட்டம் 1959 (போகா) மற்றும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (சோஸ்மா) 2012-ன் கீழ் அவர்களை மீண்டும் கைது செய்து, போலிஸ் விசாரித்து வருகிறது.

நீண்டகாலமாக அவர்களைத் தடுத்து வைத்திருப்பதால் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனர், குறிப்பாக நாளைத் தீபாவளி கொண்டாட்டத்தின் போது என்றார் சந்தியாகோ.

இதற்கிடையில், நீதிமன்றம் அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும், காவல்துறையினர் ஏன் பலமுறை அவர்களைக் கைது செய்து, தடுத்து வைக்கின்றார்கள் என்று சுவாராம் கேள்வி எழுப்பியுள்ளது.

“மீண்டும் மீண்டும் ரிமாண்ட் செய்வது வெறுக்கத்தக்கது, மேலும் நியாயமான விசாரணை இல்லாதது மனித உரிமையை மீறுகிறது. காவல்துறையினர் யாரையும் மீண்டும் மீண்டும் கைது செய்து தடுத்து வைக்க எந்தக் காரணமும் இல்லை, குறிப்பாக, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிமாண்ட் முயற்சியை நிராகரித்துள்ளபோது.

“போலிசாரின் இந்த நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு என்று கருதப்பட வேண்டும்.

“போலிசாரின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை இலகுவாக எடுத்துகொள்ளக்கூடாது, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலிஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அதன் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 29 பேரில், இந்த 25 ஆண்களும் அடங்குவர் எனப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமது கூறியுள்ளார்.

விசாரணைக்கான அறிக்கை அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் பிரிவு 130V-இன் கீழ், சந்தேக நபரைத் தண்டிக்க சான்றுகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.