கோவிட் – 19 | நேற்று, ஹெந்தியான், திரளையில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்ததற்கு சோதனை மாதிரிகள் செயலாக்கத்தின் நிலுவை காரணமா என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பினார்.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 164 புதிய பாதிப்புகள் நேற்று மதியம் 12 மணி வரை பதிவாகியுள்ளன.
அந்தத் திரளையில் இதுவரை மொத்தம் 662 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 314 செயலில் மற்றும் சிகிச்சையில் உள்ள நிலையில், 348 பாதிப்புகள் குணமடைந்துள்ளன.
அக்டோபர் 28 முதல், ஹெந்தியான் காஜாங் துணை மாவட்டம், இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.டி) கீழ் வைக்கப்பட்டுள்ளதாக ஓங் தெரிவித்தார்.
சோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால்தான் பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டதா என்று ஓங் கேள்வி எழுப்பினார்.
“சிலாங்கூர் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கோ அல்லது சிலாங்கூர் அரசாங்கத்துக்கோ விரிவான தகவல்களை வழங்காததால் என்னால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை,” என்று அவர் நேற்றிரவு தனது கீச்சகத்தில் பகிர்ந்துள்ளார்.
“பொதுமக்கள் மற்றும் பிற முக்கியத் தரப்பினர், கோவிட் -19 பரிமாற்றத்தின் வீதம் மற்றும் பொறிமுறையின் விவரங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள எங்களுக்கு விரிவான தரவுகள் வழங்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.