டாக்டர் எம் : நெருக்கடி காலத்தில் அன்வாரால் நாட்டை ஆள முடியாது

நம்பிக்கை கூட்டணி (பி.எச்.) நிர்வாகத்தின்போது, ​​அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர், அன்வர் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாகக் கூறினார், ஆனால், அந்தப் பி.கே.ஆர். தலைவருக்குப் போதுமான ஆதரவு இல்லையென திரைக்குப் பின்னால் சுட்டிக்காட்டினார்

இப்போது, ​​அன்வர் அப்பதவியை வகிக்க தகுதியற்றவர் என்று மகாதீர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இன்று, மலேசிய இன்சைட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நிதி நெருக்கடி ஏற்பட்டால் அன்வரால் நாட்டை வழிநடத்த முடியாது என, 1997-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மகாதீர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்.

“நான் பிரதமராக இருந்தபோது அவரது திறன்களைச் சோதித்துள்ளேன்.

“நான் இரண்டு மாதங்கள் விடுப்பில் இருந்தேன் (1997 மே முதல் ஜூலை வரை) அன்வர் அப்போது பிரதமராக நியமிக்கப்பட்டார்.

“நாட்டை நன்றாக ஆளக்கூடிய திறன் அவருக்கு இருக்கிறதா என்பதை மக்கள் மதிப்பீடு செய்வார்களா தெரியாது, ஆனால் 1997/98 நிதி நெருக்கடியில் அவரால் செயல்பட இயலவில்லை என்பது எனக்குத் தெளிவாக தெரியும்,” என்று அவர் பேட்டியில் கூறினார்.

அதன் பிறகு, ஒரு வருடம் கழித்து அன்வர் துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மகாதீருக்கு எதிராக சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பித்த அவருக்குப் பின்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.