பட்ஜெட் 2021 | திருத்தம் செய்யாமல், 2021 வரவு செலவுத் திட்டத்திற்குத் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கம் முழு ஆதரவை எதிர்பார்க்க முடியாது என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் தெரிவித்தார்.
எம்.பி.க்கள் அனைவரும் பொது நலனையும், மத்திய அரசியலமைப்பையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துள்ளதால், அவர்கள் பட்ஜெட்டை ஆராயும் பணியைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார் ஹசான்.
“இதற்கு பட்ஜெட் முழுவதும் மோசமானது என்று அர்த்தமல்ல. நல்லதை நாங்கள் ஆதரிக்கிறோம், கெட்டதை நாங்கள் செம்மைப்படுத்த விரும்புகிறோம். ஒரு திருத்தம் இருக்க வேண்டும், ஒரு புதிய சீரமைப்பு இருக்க வேண்டும், ஒரு புதிய மாற்றம் இருக்க வேண்டும்,” என்று அவர் பி.கே.ஆர்.ரின் ‘சுவாரா கெஅடிலான்’ பத்திரிக்கையிடம் கூறினார்.
2021 வரவுசெலவுத் திட்டம், இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலேயே மிகப்பெரியது என்றும், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி மக்களின் உரிமை என்பதால் அதனைக் கவனிக்க வேண்டியது அவசியம் என்றும் ஹசான் கூறினார்.
2021 வரவுசெலவுத் திட்டத்தில், தங்கள் நிலைப்பாட்டைக் குறிப்பிடுவதில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எச்சரிக்கையுடன் காணப்பட்டனர்.
நாடு எதிர்கொண்டிருக்கும் கோவிட் -19 நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, 2021 வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும் என்ற மாமன்னரின் ஆலோசனையை அவர்கள் பின்பற்றுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், பட்ஜெட் குறித்த உரையின் போது, 2021 பட்ஜெட் – “கோவிட் -19 பட்ஜெட்” அல்ல என்று கூறியதோடு, அதற்கு முழு ஆதரவு கிடைக்காமல் போகலாம் என்றும் எச்சரித்தார்.
டிஏபி மத்திய செயற்குழு உறுப்பினரும், இஸ்கந்தர் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங் மற்றும் லங்காவி எம்.பி. டாக்டர் மகாதிர் மொஹமட் ஆகியோரும் திருத்தங்கள் செய்யப்படாமல் தங்கள் கட்சி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்காது என்று கூறியுள்ளனர்.