`மக்களவை பட்ஜெட்டை நிராகரித்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த முடியும்’

மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தைச் செலுத்த முடியும் என்று வழக்கறிஞர் முகமது ஹனிஃப் காத்ரி அப்துல்லா தெரிவித்தார்.

பிரதமர் முஹைதீன் யாசின் பட்ஜெட்டுக்கான வாக்குகளை இழந்தால், மக்களவையில் அவருக்கு இனி ஆதரவு இல்லை என்று அர்த்தம்.

அப்படி நடந்தால், யாங் டி-பெர்த்துவான் அகோங் ஒரு புதியப் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும், அவர்கள் உடனடியாக ஒரு புதிய பட்ஜெட்டை முன்வைக்க வேண்டிவரும் என்றார் அவர்.

கூட்டாட்சி அரசியலமைப்பின் 102-வது பிரிவின் அடிப்படையில், புதிய அரசாங்கம் முதல் காலாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மட்டுமே முன்வைக்க முடியும், இது கோவிட் -19 தொற்றை எதிர்கொள்வதற்கான நிதி மற்றும் சம்பளத்தைச் செலுத்துதல் போன்ற முக்கியமான விஷயங்களை உள்ளடக்கும்.

முழு பட்ஜெட்டையும் பின்னர் தாக்கல் செய்யலாம்.

பிரிவு 102-இன் படி, “அசாதாரண அவசரம்” சூழ்நிலைகளில், தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிறைவேற்றப்படும் வரை, நிதியாண்டின் “ஒரு பகுதி”-கான செலவினங்களை மக்களவை அனுமதிக்கலாம்.

2021 வரவுசெலவுத் திட்டம் மக்களவையில் அங்கீகரிக்கப்படாவிட்டால், அரசு ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பண விநியோகம் தாமதமாகும் என்று நிதியமைச்சர் ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் நேற்று எச்சரித்தார்.

இன்று, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், நிதியமைச்சரின் அந்த அறிக்கையில், “அச்சுறுத்தல் கலந்துள்ளது” என்றும், எம்.பி.க்களின் “பெரும்பான்மை குரலை” ஒதுக்கி வைக்கும் முயற்சி என்றும் விவரித்தார்.