`ரோஹிங்கியா பிரச்சினையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கையாள வேண்டும்`

நமது திறன்களும் வளங்களும், அதிகளவில் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாலும், கோவிட் -19 பரவலால் நிலைமை இன்னும் மோசமாகிப் போயிருப்பதாலும் அகதிகள் மீதான உலகளாவிய உடன்படிக்கையில் (ஜி.சி.ஆர்) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, ரோஹிங்கியாக்கள் தொடர்பான பொறுப்புகளையும் சுமைகளையும் அனைவரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மலேசியா விரும்புகிறது

இன்று நடைபெற்ற 11-வது ஆசிய-ஐக்கிய நாடுகளின் (ஐ.நா) உச்சமன்ற மாநாட்டில் பிரதமர் முஹைதீன் யாசின், மலேசியாவால் இனி அதிகமான அகதிகளைத் தங்க வைக்க இயலாது என்றும், மியான்மார், ராகினில் ஏற்பட்டுவரும் நெருக்கடியின் விளைவுகள், மலேசியா உள்ளிட்ட இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (யு.என்.எச்.சி.ஆர்.) தலைமையிலான இரண்டு ஆண்டு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐ.நா. பொதுச்சபை, கடந்த 17 டிசம்பர் 2018-ல் ஜி.சி.ஆர்-ஐ ஏற்றுக்கொண்டது.

சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் நிலையான தீர்வுகளை அடைய முடியாது என்பதால், அனைவரும் பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் கட்டமைப்பை அது உள்ளடக்கியது.

பாலஸ்தீனியப் போராட்டத்தில், மலேசியாவின் நிலைப்பாடு நிலையானது, அதிம் மாற்றம் ஏதுமில்லை என்று முஹைதீன் கூறினார்.

“ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் துன்பத்தைத் தணிக்க, உறுதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று, மலேசியா ஐ.நாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

11-வது ஆசிய-ஐ.நா. உச்சமன்ற மாநாடு, 37-வது ஆசிய உச்சமன்ற மாநாட்டின் கடைசி நாளில் நடைபெற்றது, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குதெரெஸ் அதில் கலந்துகொண்டார்.

ஈராண்டுக்கொரு முறை நடக்கும் அந்த உச்சமன்ற மாநாட்டின் மலேசியக் குழுவிற்குத் தலைமையேற்ற முஹைதீன் கோலாலம்பூரில் இருந்து வழிநடத்தினார்.

-பெர்னாமா