கிட் சியாங் : பள்ளிகள் & கல்லூரிகளை நீண்ட காலத்திற்கு மூடுவதில் பயன் இல்லை

கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் திறந்து வைக்க கல்வியமைச்சும் உயர்க்கல்வி அமைச்சும் முயற்சிக்க வேண்டும், அவற்றை நிர்பந்தமாக மூடக்கூடாது என்று இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங் இன்று தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றின் காரணமாக, அனைத்து பள்ளிகளையும் – பச்சை மண்டலங்கள் உட்பட – நவம்பர் 9 முதல் மூடுவதாக கல்வியமைச்சர் அறிவித்தது பலதரப்பட்ட எதிர்வினைகளைக் கொடுத்ததாக அந்த டிஏபி மூத்தத் தலைவர் சொன்னார்.

“இந்த ஆண்டு தொடக்கத்தில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கோவிட் -19 தொற்றுநோயின் ஆரம்பக் காலகட்டம், தொற்றுநோயின் தன்மை மற்றும் குணாதிசயங்கள் குறித்து நிச்சயமற்ற சூழலில், அதன் பரவலைக் குறைக்க பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

“ஆனால், 10 மாதங்களுக்குப் பிறகு, அத்தொற்றுநோயின் படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்ள முடியும், மேலும் தொற்றுநோயின் காரணமாக ஏற்படும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்களைக் கையாள்வதில் நாம் நெகிழ்வாக மற்றும் திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும்,” லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், நமக்கு ஒரு படிப்பினை என்னவென்றால், பள்ளிகள் மூடப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களை மட்டும் அது பாதிக்கவில்லை, பொருளாதார மற்றும் சமூக விளைவுகளையும் அது ஏற்படுத்துகிறது, ஆக எந்தவொரு குறிப்பிட்ட விதிமுறையும் எந்தவொரு சூழ்நிலையிலும் பொருந்தாது என்பதை நாம் உணர வேண்டும் என்றார் அவர்.

“பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் கோவிட் -19 தொற்று இனப்பெருக்கம் செய்யும் இடம் என்று ரட்ஸி தீவிரமாக அறிவுறுத்துகிறாரா? ஆக, தொற்றுநோய் முடியும் வரை அவையனைத்தும் மூடப்பட வேண்டுமா?” என்று லிம் கேட்டார்.

கோவிட் -19 தொற்றுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்பதால், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்; 2022 வரை அனைத்து பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் அவர் கூறினார்.

எனவே, பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும், கடுமையான செந்தர இயங்குதல் நடைமுறைகளோடு, சிறிய அளவிலான வகுப்புகள் அல்லது மாற்று வாரங்களில் வகுப்புகளை நடத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுடன் மீண்டும் திறக்க வேண்டும்.

“பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்காக முடிவெடுப்பது பரவலாக்கப்பட வேண்டும் – எடுத்துக்காட்டாக, தேசிய அளவில், மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாநில அரசும் இந்த விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கல்வி தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் சார்ந்த குழுக்களையும், முடிவெடுக்கும் இந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.