‘தவறான செய்தி எதிர்ப்பு சட்டம்’ மீண்டும் வேண்டும், இன்று மக்களவையில் விவாதம்

முன்னதாக இரத்து செய்யப்பட்ட தவறான செய்தி எதிர்ப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டம் இன்று மக்களவை அமர்வில் விவாதிக்கப்படும்.

போலி செய்திகளைப் பரப்புவதில் உள்ள சிக்கலைக் கட்டுப்படுத்த, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோயுடன் தொடர்புடையதைத் தவிர்க்க இந்தச் சட்டம் அவசியமாகிறது என்று கருதுவதாக ஷாஹிடான் காசிம் (பி.என்-அராவ்) கூறினார்.

டாக்டர் மஸ்லீ மாலிக் (சுயேட்சை – சிம்பாங் ரெங்கம்) உயர்க்கல்வி அமைச்சரிடம் வெளிநாடுகளில் உள்ள மலேசியக் கல்வி அலுவலகங்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பவுள்ளார்.

மேலும், கோபிந்த் சிங் டியோ (பி.எச்-பூச்சோங்) கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், இயங்கலைக் கல்வி செயல்பாடு மற்றும் அதன் செயல்திறன் குறித்து கல்வி அமைச்சரிடம் கேள்வி கேட்கவுள்ளார்.

அதன்பிறகு, 2021 பட்ஜெட் தொடர்பான விவாதம், ஐந்தாவது நாளாக நடைபெறும்.

இந்த வாரம் தொடங்கி, மக்களவை அமர்வு ஒவ்வொரு திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் நடைபெறும், தவிர 80 எம்.பி.க்கள் – 41 அரசாங்கத் தரப்பினர், 39 எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் –  மட்டுமே ஒரு நேரத்திலும் மண்டபத்தில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

-பெர்னாமா