அடுத்த இரண்டு வாரங்களில், கெடா, திரெங்கானு மற்றும் ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்களில், கோவிட் -19 நிலைமை சீராக இருந்தால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) விரைவில் நிறுத்தப்படலாம் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“நாங்கள் அம்மூன்று மாநிலங்களிலும் இரண்டு வாரங்களுக்கு பி.கே.பி.பி.யைச் செயல்படுத்தினோம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நல்ல முன்னேற்றங்களைக் கண்டால், மறுசீரமைப்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு திரும்ப வருவதை நாம் பரிசீலிப்போம்,” என்று நூர் ஹிஷாம் இன்று புத்ராஜெயாவில், சுகாதார அமைச்சில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, மலேசியாவில், பெர்லிஸ், பஹாங் மற்றும் கிளாந்தானைத் தவிர அனைத்து மாநிலங்களும் பி.கே.பி.பி.யின் கீழ் வைக்கப்பட்டன. சரவாக்கில், கூச்சிங்கைத் தவிர பெரும்பாலான பகுதிகள் பி.கே.பி.பி.-யிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
இந்தப் பசுமை மண்டல மாநிலங்களைக், குறிப்பாக சிவப்பு மண்டலத்திலிருந்து வருபவர்களிடம் இருந்து பாதுகாப்பது முக்கியம் என்று நூர் ஹிஷாம் கூறினார்.
எல்லோரும் செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு இணங்கினால் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.பி. தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.