அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில், முஹைதீன் யாசின் பிரதமராக இருப்பதை 67 விழுக்காடு மலாய்க்காரர்கள் ஆதரிப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆயினும், முஹைதீன் தலைமையிலான பெர்சத்து கட்சியை 7 விழுக்காடு மலாய்க்காரர்கள் மட்டுமே ஆதரிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஏமிர் ரீசர்ச் ஆய்வகம் நடத்திய இந்த ஆய்வில், 220 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 2,064 பேர் பங்கேற்றனர்.
பிரதமர் பதவிக்கு, மலாய்க்காரர்களிடையே மிகவும் பிரபலமான இரண்டாவது நபராக டாக்டர் மகாதிர் மொஹமட் (9%), அவரைத் தொடர்ந்து, அப்துல் ஹாடி அவாங் (8%), அன்வர் இப்ராஹிம் (5%) முக்ரிஸ் மகாதிர் (4 %) மற்றும் அஹ்மத் ஜாஹித் ஹமிடி (3 %) ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றனர்.
பங்கேற்பாளர்களுக்கு மொத்தம் எத்தனை தேர்வுகள் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை.
பங்கேற்பாளர்களில் மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களில் பாதி பேரும், 94 விழுக்காடு சபா மற்றும் சரவாக் பூமிபுத்ராக்களும் பிரதமராக முஹைதீனையேத் தேர்வு செய்துள்ளனர்.
அம்னோ மிகவும் பிரபலமான கட்சி
கட்சியைப் பொறுத்தவரையில், மலாய்க்காரர்களிடையே அம்னோ மிகவும் பிரபலமான கட்சியாகவும் (51 %), அதனையடுத்து, பாஸ் (21 %), பெஜுவாங் (8 %), பெர்சத்து (7 %) மற்றும் பி.கே.ஆர். (3 %) என்றும் உள்ளன.
அமானா, டிஏபி, மசீச, கெராக்கான், பூமிபுத்ரா பெர்சத்து கட்சி மற்றும் வாரிசான் ஆகியவற்றிற்கு மலாய்க்காரர்களின் ஆதரவு முறையே 1 விழுக்காடாக உள்ளது.
பதிலளித்தவர்களில் சீனர்களில் 25 விழுக்காட்டினரும் இந்தியர்களில் 26 விழுக்காட்டினரும் சபா மற்றும் சரவாக் பூமிபுத்ராக்களில் 24 விழுக்காட்டினரும் அம்னோவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனப் பங்கேற்பாளர்கள் இடையே, மிகவும் பிரபலமான இரண்டாவது கட்சியாக டிஏபி உள்ளது, பி.கே.ஆர். இந்தியர்களிடையே இரண்டாவது மிகவும் பிரபலமான கட்சியாக உள்ளது.
சபா மற்றும் சரவாக் பூமிபுத்ராக்களிடையே பெர்சத்து சபா கட்சியும் (பிபிஎஸ்) பெர்சத்துவும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.