அடுத்த பொதுத் தேர்தலில் (ஜிஇ), பெர்சத்து மற்றும் பாஸ்-உடனான ஒத்துழைப்பை அம்னோ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரஸாலீ ஹம்ஸா கருத்து தெரிவித்தார்.
“பெர்சத்து’வுடன் அல்லது பாஸ்’உடன் இணைவதால் நமக்கு (அம்னோ) நன்மை என்ன? அவர்களின் குறிக்கோள்கள் ஒரே மாதிரியாகத் தெரிகிறது, ஆனால் இறுதியில் நமக்குள்ளே மோதல் ஏற்படும்.
“அந்த மோதல்கள் மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லதல்ல. எனவே, நாம் நன்றாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்,” என்று அவர் சொன்னதாக தி மலேசியன் இன்சைட் செய்திகள் கூறுகின்றன.
நாற்காலிகள் பகிர்ந்தளிப்பைப் பொறுத்தவரை, கட்சி ஜிஇ14-இல் வென்ற இடங்களைப் பெர்சத்துவுடன் சமரசம் செய்யாமல் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
“நாங்கள் வென்ற இடங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது, இனி அதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, அவை எங்கள் நாற்காலி,” என்றார்.
பாகோ (முஹைதீன் யாசின்) மற்றும் லங்காவி (டாக்டர் மகாதிர் முகமது) ஆகிய நாடாளுமன்ற இருக்கைகளையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்றும் ரஸாலீ கூறினார்.
“அது யாருக்கும் சொந்தமான தொகுதி அல்ல, அந்த இருக்கைகள் புதியதல்ல, ஆனால் முன்னாள் நாம் செய்த பிரச்சார தவறுகளால் அவற்றை இழந்தோம்.
“இப்போது மீண்டும் முயற்சி செய்வோம்… அந்தப் பகுதிகள் அனைத்தும் எங்களுக்கு வேண்டும், சரியான திட்டங்கள் இருந்தால் அவற்றை வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
“நாங்கள் லங்காவி அல்லது பகோவில் ஒருபோதும் தோற்றதில்லை,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், பெர்சத்து தலைவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் மன்னிக்க முடியாத துரோகிகள் என்றும் கு லி வர்ணித்தனர்.
“முஹைதீனுக்கு ஆதரவாகப் பலர், துரோகிகள் … எங்களிடமிருந்து ஓடியவர்கள், வழக்குகள் உள்ளவர்கள், அவர்கள் மன்னிக்க முடியாதவர்கள் என்று நாங்கள் கருதுகிறோம். இப்போது அவர்கள் முஹைதீனுடன் இருக்கின்றனர்.
“அரசாங்கத்தை அமைப்பதற்காகக் கூட, அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம்.
“ஆதரவு கொடுப்பது உகந்ததல்ல என்று நாங்கள் கருதுகிறோம் … ஆனால் என்ன செய்வது, ஒரு நல்ல சூழ்நிலையை நாங்கள் காண விரும்புகிறோம், கோவிட் -19 தொற்றின் தாக்கம் வேறு ஒருபுறம். அதனால்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்,” என்று தேசியக் கூட்டணி உருவான கதையை அவர் குறிப்பிட்டார்.