சீனர்களில் அதிகமானோர் அம்னோவை ஆதரிக்கின்றார்கள் எனும் எமீர் ரீசர்ச் ஆய்வகத்தின் ஆய்வு தவறானது என்று பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி கூறியுள்ளார்.
மலேசியச் சீனர்களிடையே அம்னோ மிகவும் பிரபலமான கட்சி என்றும், அவர்களில் 17 விழுக்காட்டினர் மட்டுமே டிஏபியை ஆதரிக்கின்றனர் என்றும், முடிவைக் கண்ட ஆய்வின் வழிமுறை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
“இது ஒரு விசித்திரமான ஆராய்ச்சி கண்டுபிடிப்பு, ஆனால் சீனர்களும் இந்தியர்களும் பக்காத்தான் ஹராப்பானுடன் சேர்ந்திருக்கும் டிஏபி மற்றும் பி.கே.ஆர்.-ஐயே ஆதரிப்பார்கள்,” என்று இராமசாமி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏமிர் ரீசர்ச் ஆய்வகம், 220 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 2,064 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியது.
சீனப் பங்கேற்பாளர்களில், 25 விழுக்காட்டினர் அம்னோவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதையும், அதைத் தொடர்ந்து, டிஏபி 17 விழுக்காடு, மசீச 12 விழுக்காடு எனப் பெற்றிருப்பதையும் இராமசாமி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கூறினார்.
“பதிலளித்த 2,000 பேர்களின் முடிவுகள் மிகவும் விசித்திரமானவை, கற்பனைகூட செய்ய முடியாதவை,” என்ற அவர், இதனால் அந்த ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்பட்டது, அதன் பின்னணியில் உள்ள நோக்கங்கள் என்ன மற்றும் பதிலளித்தவர்கள் யார் யார் என்பது பற்றியக் கேள்விகளை எழுப்புகிறது என்றும் சொன்னார்.
“டிஏபி-க்கு, சீனர்களின் ஆதரவு 17 விழுக்காடு மட்டுமே இருக்கிறது என்று சொல்வதும் மற்றொரு விசித்திரமான முயற்சி,” என்று பிரை சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
டிஏபி 42 எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, அதுமட்டுமின்றி சீனர்கள் பெரும்பான்மை இருக்கைகளைக் கொண்டுள்ள கட்சியாகவும் அது விளங்குகிறது, குறிப்பாக 2008 தேர்தலுக்குப் பிறகு.
“அண்மையில் அம்னோ சீனர்களால் நேசிக்கப்படும் அளவிற்கு என்ன செய்துவிட்டது, சீனர்களால் நிராகரிக்கப்படும் அளவிற்கு டிஏபி என்ன செய்தது?” என்று இராமசாமி கேள்வி எழுப்பினார்.
“அம்னோ இன்றும் டிஏபியின் முதல் எதிரி, 2018-ல் நடந்த பொதுத் தேர்தலில், டிஏபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அம்னோ மற்றும் தேசிய முன்னணியைத் தோற்கடிக்க கடுமையாகப் போராடினார்கள்.
“ஏராளமான சீனர்களின் ஆதரவு டிஏபி-க்கு இருக்கிறது.”
டிஏபிக்குச் சீனர்களின் ஆதரவு முன்பு இருந்ததைப் போலவே இருக்காது என்றாலும், அம்னோ – பிஎன் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் – டிஏபி, இடையே ஒரு தேர்வு வழங்கப்பட்டால், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் தொடர்ந்து டிஏபிக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாக அவர் சொன்னார்.