கதிர் ஜாசின் : ஜஃப்ருல் தவறாக சொல்கிறாரா அல்லது மிரட்டுகிறாரா?

நிதியமைச்சர் ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் சில நாட்களுக்கு முன்பு, 2021 பட்ஜெட் தொடர்பான ஓர் அறிக்கையை வெளியிட்டபோது, தவறாகப் பேசிவிட்டாரா அல்லது அச்சுறுத்தல் விடுத்தாரா என்று மூத்தப் பத்திரிகையாளர் ஏ கதிர் ஜாசின் கேள்வி எழுப்பினார்.

பட்ஜெட் அங்கீகரிக்கப்படாவிட்டால் அரசு ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட முனைமுகப் பணியாளர்களின் சம்பளத்தை அரசாங்கத்தால் செலுத்த முடியாது என்று, கடந்த நவம்பர் 14-ல் ஜஃப்ருல் கூறியிருந்தார், இது சிலரால், குறிப்பாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

ஜஃப்ருல் தவறாகவோ அல்லது வேண்டுமென்றே அரசியல் விளையாடுவதாகவோ தெரிகிறது என்று கூறிய கதிர், அப்படியானால், “குறைபாடுள்ள மற்றும் நியாயமற்றது” எனக் கருதப்படும் அந்தப் பட்ஜெட்டை ஏற்றுக்கொள்ளும்படி அவர் கட்டாயப்படுத்துகிறாரா? அதற்காக அவர் அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவது ஒரு தீயசெயல் என்றும் கூறினார்.

“இந்த அரசியல் விளையாட்டில் அவர் ஒரு சிறுவன் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்,” என்று கதிர் சொன்னார்.

முன்னதாக, தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு திட்டம் போதிய ஆதரவைப் பெறவில்லை என்றால், முஹைதீன் அரசாங்கம் கலைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மன்னர் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார், கூட்டாட்சி அரசியலமைப்பின் 102-வது பிரிவின் அடிப்படையில், புதிய அரசாங்கம் முதல் காலாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியும், இது கோவிட் -19 தொற்றை எதிர்கொள்வதற்கான நிதி மற்றும் சம்பளத்தைச் செலுத்துதல் போன்ற முக்கியமான விஷயங்களை உள்ளடக்கும் என்று வழக்கறிஞர் முகமது ஹனிஃப் காத்ரி அப்துல்லா கூறியிருந்தார்.

பிரிவு 102-இன் படி, “அசாதாரண அவசரம்” சூழ்நிலைகளில், தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிறைவேற்றப்படும் வரை, நிதியாண்டின் “ஒரு பகுதி”-கான செலவினங்களை மக்களவை அனுமதிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஹனிஃப் தவிர, பல எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜஃப்ருலின் அறிக்கையை விமர்சித்தனர், அந்த வரிசையில், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் உட்பட பலரும் அது அச்சுறுத்தல் என்று கூறினர்.

2021 வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நாட்டின் அடிப்படை நிர்வாகமும் கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இரு தரப்பு எம்.பி.க்களும் (a) மற்றும் (b) விதிகளை அமல்படுத்த ஒன்றிணைய வேண்டும் என்று கதிர் பரிந்துரைத்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து தேசியக் கூட்டணி எம்.பி.க்களும் பட்ஜெட் திட்டத்திற்கு உடன்படவில்லை, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் ஜி.எல்.சி பதவிகளில் “வெகுமதி” அனுபவிப்பவர்கள் தவிர என்றும் கூறினர்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகள் உட்பட மற்ற எம்.பி.க்களின் பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, பட்ஜெட் திட்டத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பிரதமர் முஹைதீன் யாசினுக்கும் அவரது அமைச்சரவைக்கும் ஜஃப்ருல் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கதிர் பரிந்துரைத்தார்.