பெரிய கூட்டணி அல்லது பெரிய நிபந்தனை என்றால் என்ன? அன்னுவார் மூசாவிடம் டிஏபி கேள்வி

தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா முன்மொழிந்தது போல், ஒரு பெரிய அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டால் யார் பிரதமராக இருப்பார்?

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இன்று ஓர் அறிக்கையில் எழுப்பிய கேள்விகளில் இதுவும் ஒன்றாகும்.

 

அப்பெரியக் கூட்டணியில் சேர, அம்னோ ஏதேனும் நிபந்தனைகள் விதிக்குமா என்று அவர் கவலை தெரிவித்தார்.

“பெரியக் கூட்டணி அல்லது பெரிய நிபந்தனைகள்?

“அவர் ஒரு பெரியக் கூட்டணியை உருவாக்க முன்மொழிந்தது, RM2.6 பில்லியன் மதிப்புள்ள கேள்வி, இது ஒரு பெரியக் கூட்டணியாக இருக்குமா அல்லது அம்னோ அரசியல்வாதிகளை அடுத்த மலேசியப் பிரதமராக நியமிக்க வேண்டும் எனும் நிபந்தனையைக் கொண்டதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

“47 ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் இருக்கும் முன்னாள் துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அல்லது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பிரதமராக வருவார்களா? அன்னுவார் மூசா, தானே துணைப் பிரதமராக இருப்பாரா? என்று லிம் கேட்டார்.

நேற்று, கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினருமான அன்னுவார், குறைந்தது 12 முதல் 13 அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டுமென முன்மொழிந்தார்.

தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி, சபா கூட்டணி கட்சி மற்றும் சரவாக் மக்கள் கூட்டணி என சம்பந்தப்பட்ட கட்சிகளை இணைக்க அவர் அழைப்பு விடுத்தார்.

“பக்காத்தான் ஹராப்பானை நிராகரிக்கும் மற்றும் சில சுயேட்சைக் கட்சிகளும் ஒன்றிணையலாம்,” என்றும் அன்னுவார் கூறினார்.

வாரிசான் சபா, பெஜுவாங் (துன் மகாதீர்), முடா (சைட் சட்டீக்) மற்றும் மக்களவையில் இல்லாதா பெர்ஜாசா, ஐ.பி.எஃப்., மக்கள் சக்தி மற்றும் சிந்தா மலேசியா கட்சி (Parti Cinta Malaysia) போன்றவற்றையும் அவர் தனது பட்டியலில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, அடுத்த தேர்தலுக்காக முன்மொழியப்பட்டிருக்கும் அப்பெரிய கூட்டணிக்கு, பிரதமர் வேட்பாளர் யார் பரிந்துரைக்கப்படுவார் என்பதை அன்னுவார் தெளிவாக விளக்க வேண்டும் என்று லிம் கூறினார்.

“முன்மொழியப்பட்ட அப்பெரியக் கூட்டணியை, எந்தக் கட்சி வழிநடத்தும், அம்னோ அல்லது பாஎஸ் அல்லது ஒரு புதிய கட்சி… எது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்,” என்று லிம் கூறினார்.