கோலாலம்பூரில் மதுபான உரிமங்கள் தொடர்பான புதிய விதிமுறைகள், ஏற்கனவே கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட விதிமுறைகளில், மளிகைக் கடைகள், பல்வகை பொருள் விற்பனை கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகள் ஆகியவை, அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல், மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை வணிகங்களுக்குப் பாதிப்பை விளைவிப்பது மட்டுமல்லாமல், அரசாங்க வரி வருவாயையும் குறைக்கும் என்று சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் சீன மதுபான விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆல்பர்ட் சூய் லியோங் பியோ கூறினார்.
“அவர்கள் உரிமங்களை வழங்காவிட்டால், நாங்கள் எவ்வாறு வருமானம் ஈட்டுவது? மேலும் இதனால், அரசாங்கத்திற்கு வரி கிடைக்காது,” என்றும் அவர் மலேசியாகினியிடம் கூறினார்
மலேசிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவரான ஹோங் சீ மெங்கும் இதேக் கருத்தைத் தெரிவித்தார்.
“கோலாலம்பூரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கொள்கை நாட்டைப் பாதிக்காது (இப்போது), ஆனால் ஒரு நாள், நாடு தழுவிய அளவில் இதனை விரிவுபடுத்தினால் என்னாவது? வரி வருவாய் குறைக்கப்படும், அது நிச்சயமாக மலேசியாவிற்கு இழப்பாகும்,” என்று ஹோங் கூறினார்.
வரி வருவாய் இழப்பு தவிர, இது கடத்தல் நடவடிக்கைகளின் அதிகரிப்புக்கும் பங்களிக்கக்கூடும் என்றார் சூய்.
டி.பி.கே.எல். அறிவித்த இந்தக் கொள்கை பிற்போக்குத்தனமானது என்றும் அவர் கூறினார்.
“உலகின் ஒவ்வொரு தலைநகரத்திலும் மதுபானம் விற்கப்படுகிறது. ஆனால், நாம் ஏன் ஒரு படி பின்நோக்கிச் செல்கிறோம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
டி.பி.கே.எல்.-ஐ சந்திப்பதற்கு முன்னதாக, மக்கள் பிரதிநிதிகளுடன் புதிய விதிமுறைகள் பற்றி விவாதிக்க, சங்கம் விரைவில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் என்றும் அவர் சொன்னார்.