ஐ.சி.சி.யில் சேர வேண்டாம் என்ற பி.எச். முடிவைப் பி.என். தொடர்கிறது

மக்களவை | சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) ரோம் சட்டத்திலிருந்து விலகுவதற்கான முந்தைய அரசாங்கத்தின் முடிவைத் தேசிய கூட்டணி அரசு (பி.என்.) உறுதி செய்தது.

ஐ.சி.சி.-யில் இருந்து மலேசியா விலகுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளதாகத் துணை வெளியுறவு அமைச்சர் கமாருடின் ஜாஃபார் தெரிவித்தார்.

“ஏப்ரல் 29, 2019-ல், ரோமானியச் சட்டத்திலிருந்து விலகுவதற்கான மலேசியாவின் முடிவை உறுதிப்படுத்தும் கடிதத்தை ஐ.நா. அனுப்பியது, மலேசியா அதிகாரப்பூர்வமாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

“முந்தைய அரசாங்கம் எடுத்த முடிவை, பி.என். அரசாங்கம் பராமரிக்கிறது,” என்று அவர் இன்று காலை மக்களவையில் நடந்த வாய்வழி பதில் அமர்வில் கூறினார்.

ரோமானியச் சட்டத்தில், மலேசியாவின் நிலை குறித்தும், எதிர்காலத்தில் ஐ.சி.சி.யில் சேர அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் சாத்தியம் குறித்தும், மரியா சின் அப்துல்லா (பி.எச்.-பெட்டாலிங் ஜெயா) விடுத்த கேள்விக்குப் பதிலளித்தபோது கமாருடின் இதனைக் கூறினார்.

சமுதாயத்தில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சில தரப்பினர் அரச நிறுவனத்தை அரசாங்கத்திற்கு எதிராக இழுக்க முயன்றதன் காரணமாக, மலேசியாவை ஐ.சி.சி.- யிலிருந்து விலகிக்கொள்ள, கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி அமைச்சரவை முடிவு செய்தது.

இந்த முடிவை அறிவித்த டாக்டர் மகாதீர் மொஹமட், அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவைச் சில தரப்புகள் அரசியல் பிரச்சினையாக மாற்றி, ஒரு மோசமான பிம்பத்தை வழங்குகின்றன, குறிப்பாக அவர் பிரதமராக இருக்கும்போது என்று கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த கமாருடின், மலேசியர்களின் “பெரும்பான்மையினர் விருப்பத்திற்கு” ஏற்ப, பிஎன் அரசாங்கம் ஐ.சி.சி.யில் சேர விரும்பவில்லை என்றார்.