பெர்மோடலன் நேஷனல் பெர்ஹாட்டின் (பி.என்.பி), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜலீல் ரஷீத், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகப் பணத்தை அச்சிட வேண்டும் எனும் யோசனையை நிராகரித்தார்.
மக்கள் செலவழிக்க ஏதுவாக, அதிகமான ரிங்கிட் நோட்டுகளைத் தேசிய வங்கி அச்சிட வேண்டும் எனும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணையமைச்சர் வான் அஹ்மத் ஃபாய்சல் வான் அஹ்மத் கமலின் முன்மொழிவைத் தொடர்ந்து ஜலீல் இவ்வாறு சொன்னார்.
கடந்த திங்கட்கிழமை பி.எஃப்.எம். வானொலியில் பேசியத் துணையமைச்சர், மக்களுக்கு உதவும் வகையில், கடன்களை அகற்றுவதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்றார்.
இதனை, “ஹெலிகாப்டர் பணம்” என்றப் பணவியல் கொள்கையின் மூலம், மத்திய வங்கி நேரடியாக அச்சிட்டு, மக்கள் செலவழிக்கக் கொடுக்க முடியும்.
இவை செயல்படுத்தப்படக்கூடிய சில படிகள், மேலும் மத்திய வங்கியிடமிருந்து புதுமையான கொள்கைகள் தற்போது நாட்டுக்குத் தேவை என்றும் அவர் கூறினார்.
ஹெலிகாப்டர் பணம் என்பது, மந்தநிலையின் போது பொருளாதாரத்தைத் தூண்டுவதற்காக, மக்களிடையே விநியோகிக்கப்பட வேண்டிய புதியப் பணத்தை பெருமளவில் அச்சிடும் கொள்கை ஆகும்.
இருப்பினும், ஜலீல் அதை ஏற்கவில்லை, அத்தகையக் கொள்கை செயல்படாது என்று அவர் வாதிட்டார்.
“பணத்தை அச்சிடுவது மலேசியாவிற்கு ஒரு தீர்வாகாது. இது நாணயத்தின் மதிப்பை குறைத்துவிடும், – இப்போது கூட ரிங்கிட்டின் மதிப்பு பலவீனமாக உள்ளது – அதிகமாக புழக்கத்தில் இருக்கும்போது.
“இது ஒரு கேக்கை 10 துண்டுகளிலிருந்து 20 துண்டுகளாகப் பிரிப்பது போன்றது. உங்கள் பகுதி சிறியதாகிவிடும்,” என்று நேற்று இரவு கிச்சகத்தில் அவர் கூறினார் – வான் ஃபாய்சாலைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல்.
அத்தகையக் கொள்கையை அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும் ஜலீல் கூறினார்.
ஏனென்றால், டாலர் சர்வதேச வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதிகமான பணப் புழக்கத்தில், அதிக தேவையும் இருக்கும்.
ஹெலிகாப்டர் நாணயக் கொள்கையைப் பின்பற்றிய ஜிம்பாப்வே மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் தீவிரப் பணவீக்கத்தைக் கண்டன என்றும் ஜாலில் சொன்னார்.