1எம்.டி.பி. ஊழலில் சம்பந்தப்பட்ட வணிகர், லோ தேக் ஜோ அல்லது ஜோ லோவை அழைத்து வருவதில் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து டிஏபி எம்.பி. இன்று கேள்வி எழுப்பினர்.
கோபிந்த் சிங் டியோ (பி.எச்.- பூச்சோங்), கடினமான இந்தச் சூழ்நிலையில், நாட்டின் சொத்து மற்றும் பணத்தை அரசாங்கம் கொண்டு வருவது முக்கியம் என்றார்.
எனவே, சர்ச்சைக்குரிய அந்தத் தொழிலதிபரையும் திருடப்பட்ட அரசாங்கப் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
“நமது அரசாங்கம் அமைதியாக இருக்கிறது, தேசியக் காவல்துறைத் தலைவரே அவரை நாடு திரும்பும்படி கேட்டுக்கொள்கிறார்,” என்று அவர் இன்று நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறினார்.
இதற்கிடையில், 2021 வரவுசெலவுத் திட்டத்தில் தேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்தும் கோபிந்த் கேள்வி எழுப்பினார்.
1எம்டிபி ஊழலில் முன்னாள் பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடுப்பது உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை செயல்படுத்தும் நாட்டின் ஒரு முக்கியமான அமைப்பு அது என்று அவர் கூறினார்.