‘சீனர்கள் அம்னோவை அதிகம் ஆதரிக்கிறார்கள்’, என்றக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்குமா மசீச?

கருத்து | டிஏபி-ஐ விட, அதிகமான சீனர்கள் அம்னோவை ஆதரிப்பதாகக் கூறும் ‘எமிர் ரிசர்ச்’ ஆய்வின் கண்டுபிடிப்புகள் அபத்தமானவை, கேலிக்குரியவை, ஆனால் இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அம்னோவுக்கு மசீச-வைவிட இரண்டு மடங்கு அதிகமான ஆதரவு கிடைத்திருப்பது.

மசீச-வுக்கு என்ன நேர்ந்தது?

இந்தக் கேள்விக்குக் பதிலளிக்க மசீச தலைவர்களே சிறந்தவர்கள், இதற்குப் பதிலளிக்க எனக்குத் துணிவில்லை.

உண்மையில், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க அவர்களுக்குத் தைரியம் உண்டா?

எமீர் ரீசர்ச் ஆய்வகத்தின் இந்த ஆய்வு முடிவுகள், “கிராண்ட் கோலிஸன்” அல்லது “பெரியக் கூட்டணி” பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த “மாபெரும் கூட்டணியை” பற்றி பேசுபவர்கள் வேறு யாருமல்ல, பல இன, மத மற்றும் கலாச்சாரம் கொண்ட தேசத்தை உருவாக்குவதற்கான 5 அடிப்படை தேசியக் கோட்பாடுகளை மறந்துவிட்டு, தீவிர இனவெறி மற்றும் மத அரசியலை நடைமுறைபடுத்துபவர்கள்.

இந்த “மாபெரும் கூட்டணி” என்ற யோசனை, 1957-ஆம் ஆண்டில், சுதந்திரத் தந்தை, துங்கு அப்துல் ரஹ்மான் கொண்டிருந்த கனவுகளைப் பூர்த்திசெய்கிறதா? ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகத்தால் தோல்வியுற்ற ஒரு நாடாக இல்லாமல், உலகத் தரம் வாய்ந்த நாடாக மலேசியாவை உருவாக்க வேண்டும் எனும் அனைத்து மலேசியர்களின் கனவை அது பூர்த்திசெய்கிறதா?


லிம் கிட் சியாங் டி.ஏ.பி., இஸ்கண்டார் புத்ரி எம்.பி.