கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2021-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் முனைமுகத் தொழிலாளர்களைப் (fronliners) புறக்கணிப்பு செய்திருக்கிறது என்பதால், அதனை ஏற்க முடியாது என அரசு குத்தகைத் தொழிலாளர்கள் சங்கம் (ஜே.பி.கே.கே) தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் அனைத்து ஊழியர்களையும் முனைமுகத் தொழிலாளர்களாக வகைப்படுத்துவதோடு; வர்க்கம், தொழில், மதிப்பு அல்லது தோற்றத்தைப் பார்க்காமல், 2021 பட்ஜெட்டில் உடனடியாக அவர்களுக்கும் ஒரு பங்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
“அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள், அரசு பள்ளிகளில் இருக்கும் பாதுகாவலர்கள், அங்கு வேலை செய்யும் தோட்டக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஊழியர்களும் முனைமுகத் தொழிலாளர்களாக இருப்பதோடு, அவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும், உயிரைப் பணையம் வைத்து கோவிட் பெருந்தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர்,” அச்சங்கத்தின் ஒருங்கிணைபாலர் சிவரஞ்சனி மாணிக்கம் தெரிவித்தார்.
“2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், அவர்களைப் புறக்கணிப்பதற்கான நோக்கமே அவர்கள் குத்தகைத் தொழிலாளர்களாக இருப்பதுதான்.”
“அவர்கள் மூன்றாம் தரப்பினரால் பணியமர்த்தப்பட்டு ஊதியம் பெறுவதால், மலேசிய அரசாங்கம் இவர்களை முனைமுகத் தொழிலாளர்களாக அங்கீகரிக்கவில்லை. எனவே, அரசாங்கத்தால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் கோவிட்-19 சிறப்பு நிதியுதவியான RM600 பெறுவதற்கும், அதோடு கோவிட் பெருந்தொற்றை எதிர்த்து போராடும் பங்களிப்புக்கான சிறப்பு வெகுமதியாக சுகாதார அமைச்சு வழங்கிய RM500 பெறுவதற்கும் இத்தொழிலாளர்கள் அனைவரும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்,” என்றார் அவர்.
“மக்களவையில், 2021 பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதியமைச்சர், ஜஃப்ருல் அஜீஸ், “இந்தக் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து முனைமுகத் தொழிலாளர்களின் சேவையையும் தியாகத்தையும் அரசாங்கம் பாராட்டுகிறது,” என்றார்.”
“எனினும், வீரர்களாகக் கருதப்படவேண்டிய முனைமுகத் தொழிலாளர்களான மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்களையும் பள்ளி பாதுகாவலர்கள் மற்றும் தோட்டக்காரர்களையும் 2021 பட்ஜெட்டில் இருந்து தவிர்ப்பது, அவரது பேச்சுக்கு முரணாக இருப்பதோடு, 2021 பட்ஜெட் ‘பாரபட்சமானது’ என்பதையுமே அறிவுறுத்துகிறது,” என சிவரஞ்சனி மேலும் சொன்னார்.
“இன்னும் சொல்லப்போனால், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் வேலைசெய்யும் நம் முதல்நிலை வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவரி, கையுரை, கைத்தூய்மி ஆகியவைப் போதாமல், ஒவ்வொரு நாளும் கோவிட்- 19 எளிதில் பரவக்கூடிய அபாயத்தில் உள்ளனர். இவர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினால், கோவிட்-19 தொற்று, இவர்களுக்கு மட்டுமின்றி, இவர்களின் குடும்பத்தினருக்கும் பரவமால் இருக்க உதவ முடியும்.”
“மலேசிய அரசாங்கம் மொத்தம் RM318 மில்லியனைப் பாதுகாப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கியுள்ளது. ஆனால், இவர்கள் அரசாங்கத்தின் கீழ் பணியில் இல்லாததால் இச்சலுகைகளை இழக்கிறார்கள். அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கூட குத்தகைத் தொழிலாளர்களின் முதலாளிகள் கையில்தான் இருக்கிறது.”
“இதன்வழி நாங்கள் வழியுறுத்துவது என்னவென்றால், அரசு அலுவலகங்களில் இயங்கும் குத்தகை அடிப்படையில் வேலை செய்யும் மேற்குறிப்பிட்ட தொழிலாளர்கள் அனைவரையும், அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அரசு ஊழியர்களாக வகைப்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.
“அதுமட்டுமின்றி, 2021 வரவுசெலவு திட்டத்தில், கோவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராடும் அனைத்து முனைமுகத் தொழிலாளர்களுக்கும், வர்கம், தொழில், தகுதி போன்ற பாரபட்சங்கள் பார்க்காமல், அனைவருக்கும் சரிநிகர் சலுகையளிக்க வேண்டும் என மத்திய அரசு, பிரதமர், நிதியமைச்சர், கல்வியமைச்சர் மற்றும் மனிதவள அமைச்சர் ஆகியோரிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம்,” எனச் சிவரஞ்சனி ஓர் அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டார்.