சட்டமன்ற, ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தைக் குறைக்க பினாங்கு ஆலோசித்து வருகிறது

கோவிட்-19 தொற்றுநோய் சவால்களை எதிர்கொள்ள, பினாங்கு ஆட்சிக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அம்மாநில அரசு பரிசீலிக்க உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இதே நடவடிக்கையை மாநில அரசு நடைமுறைப்படுத்தியதாக மாநில முதல்வர் சோவ் கோன் யோவ் கூறினார்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியினர் உட்பட தங்களது சம்பளத்தில் 30 விழுக்காட்டை ஏகமனதாக இந்த நிதிக்கு வழங்கினர் என்றார் அவர்.

“கடந்த ஏப்ரல் மாதம், மாநில ஆட்சிக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர். நாங்கள் வெறுமனே பேசிக்கொண்டு இருக்கவில்லை, செயல்படுத்தி காட்டியுள்ளோம்.

“எனவே, இந்தப் பரிந்துரையை (மாநில அரசாங்கத்தின் சுமையைக் குறைப்பதற்காக) நாங்கள் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்,” என்று அவர் இன்று ஜோர்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநில அரசின் சுமையைக் குறைக்கும் முயற்சியில், சம்பளக் குறைப்புகளைச் செய்ய பல மாநில அரசுகள் முன்மொழிந்துள்ளப் பரிந்துரைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

முந்தைய சம்பளக் குறைப்பு நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் எனும் நோக்கத்தில் மாநில மக்கள் பிரதிநிகள் எடுத்த முடிவாகும், அத்தகைய நடவடிக்கையை எடுத்த முதல் மாநிலம் பினாங்கு என்றும் அவர் கூறினார்.

-பெர்னாமா