10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன, பாலசுந்தரத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை

விமர்சனம் | சாதாரண மக்கள் நலனுக்காகப் போராடி வந்த வழக்குரைஞர் ஜி பாலசுந்தரம் கொடூரமாகக் கொல்லப்பட்டு, 10 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் இன்றுவரை அவருக்கு நீதி கிடைக்கவே இல்லை.

10 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், அவரது வீட்டிற்கு வெளியே, காரில் இருந்து இறங்கியவரைக், கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றனர்.

யாரோ ஒருவர் விரிவாகத் திட்டமிட்டு, பணம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தி இக்கொடூரத்தைச் செய்துள்ளார் என்பதை நாம் அறிய நீண்ட காலம் பிடிக்கவில்லை. ஆனால், வெளித் தோற்றத்தில் கடினமானவராக தெரிந்தாலும், அவரைப் போன்ற ஒரு கனிவான, மென்மையான ஆத்மாவைக் கொல்லும் அளவிற்குத் தீவிரமாக வெறுப்பது எப்படி சாத்தியமானது?

நவம்பர் 16, 2010-ல் நடந்த பாலாவின் மரணம், தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே இன்றுவரை உள்ளது. ஒரே ஒரு விஷயம் நிச்சயம் – உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட பாலா எடுத்த ஏதோ ஒரு முயற்சியின் முடிவு, இக்கொலைக்குப் பின்னால் இருக்கிறது.

பாலாவின் திடீர் மரணம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் நம்மில் பலர் அவருடன் தொடர்பில் இருந்தோம் – ஒன்றாக உணவு சாப்பிட்டோம் அல்லது அத்துயரச் சம்பவம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, அவரிடம் பேசி இருப்போம் அல்லது நகைச்சுவையான ஒரு குறுஞ்செய்தியை அவரிடமிருந்து பெற்றிருப்போம்.

கொல்லப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக, அவர் தனது நெருங்கிய நண்பரான வெங்கட்-உடன், இணை ஆலோசகராக ஈப்போ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார், நூற்றுக்கணக்கானவர்களைத் திரட்டி, செமோரில் உள்ள கோல குவாங் புதுக் கிராமத்தை மாசுபடுத்தும் ஒரு இரப்பர் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து போராடியப், பி.எஸ்.எம். சேகர் உட்பட, நான்கு செயற்பாட்டாளர்களின் தண்டனைக்கு மேல்முறையீடு செய்ய அவர் அங்கு வந்திருந்தார்.

ஏழை, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான, மேம்பாட்டாளர்கள் அல்லது அரசாங்கத்திற்கு இடையே நடந்த பல சட்டப் போராட்டங்களில் பாலா ஈடுபட்டிருந்தார்.

1996, மார்ச் மாதத்தில் ஒரு நாள், கம்போங் செக்கடியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், கட்டாய வெளியேற்றத்திற்கு எதிராகப் போலிஸ் புகார் செய்ய, புந்தோங் காவல் நிலையத்திற்கு அணிவகுத்துச் சென்றனர்.

மத்தியச் சேமப் படையின் (ஃப்.ஆர்.யு.) வருகை பிரச்சினையைப் பெரிதாக்க, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

அப்போது, சட்டத் தொழிலைத் தொடங்காத பாலா, கிராமவாசிகள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போலிஸ் புகார் செய்ய தானாக வந்தார்.

அப்போது அவருக்கு நாங்கள் அறிமுகமானவர்கள் அல்ல, ஆனால் விஷயம் குறித்து கேள்விப்பட்ட அவர் புகாரளிக்க வந்தார், பொது மக்கள் கைது செய்யப்பட்டது அவரைக் கோபத்திற்கு ஆளாக்கியிருக்க வேண்டும்.

அதுதான் நாங்கள் அறிந்த பாலா – “ஒவ்வொரு அநீதியைக் காணும் போதும் கோபத்தில் அவர் வெகுண்டெழுவார்”, அதனை எதிர்த்து போராட முன்நிற்பார்.

அன்றிலிருந்து, அலைகள் (தோட்டப் பாட்டாளிகள் நலனுக்காகப் பணியாற்றும் ஒரு சமூக அமைப்பு), பின்னர் மலேசிய சோசலிசக் கட்சிக்கு (பி.எஸ்.எம்.),  கிட்டத்தட்ட பாலா எங்களுக்குச் சொந்தம் என்பதுபோல் ஆகியது; அவர் நாங்கள் சார்ந்த வழக்குகளைச் செய்வதற்காக பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார், அதனால் பணம் வரக்கூடிய பல வழக்குகள் அவரிடம் இருந்து கைமாறின.

நேரம் காலம் கருதாமல், எங்கள் வழக்குகளை ஆய்ந்து அறிந்து தாக்கல் செய்வார்.

பாலாவுக்கு மலேசிய நீதித்துறை மீது பெரிதாக நல்லெண்ணம் இல்லை, அதைப் பற்றி அடிக்கடி கோபப்பட்டார். அவர் எங்களுக்காகப் போராடிய பல “சாத்தியமற்ற” வழக்குகளே இதற்குக் காரணம்.

அவற்றுள் பல கட்டாயமாக வெளியேற்றப்படும் வழக்குகள், அரசாங்கம் அல்லது தோட்ட நிறுவனங்கள் அல்லது மேம்பாட்டார்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை.

சில எடுத்துக்காட்டுகள்:-

  • 1999-ல், ஈப்போ உயர்நீதிமன்றத்தில் ஸ்பூனர் சாலை, கம்போங் டிபிஐ கிராமவாசிகளைப் பிரதிநிதித்து, ஈப்போ மேயருக்கு எதிராக ஒரு தடை உத்தரவை வென்றார் – “முன்னாள் தொழிலாளர்களின் வீடுகளை இடிக்கும்போது கல்நார் பொருட்களை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” என்று;
  • மாற்று வீடுகளுக்காகப் போராடிய ஸ்ட்ராதிஸ்லா தோட்டத் தொழிலாளர்கள் மீது பேராக் மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடுத்த வெளியேற்ற வழக்கு, முன்னதாக கோல்டன் ஹோப் தோட்ட நிறுவனம் தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்க வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது;
  • கம்போங் ஸ்ரீ கிளெபாங் குடியிருப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டிய வீடுகளைச் சட்டவிரோதமாக இடித்ததற்காக அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு;
  • வீட்டு மேம்பாட்டாளர் ஒருவருக்குச் சாதகமாக அமைந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துப் போராடிய, தானா ஹீத்தாம் விவசாயிகளின் மூன்றாம் தலைமுறையினருக்கு ஆதரவாக;
  • இரயில் கூட்டு நிறுவனமான எம்.எம்.சி. கமுடாவால், கட்டாய வெளியேற்றத்தை எதிர்கொண்ட ஒரு சிறு வணிகர் தொடர்பான வழக்கு;
  • மேம்பாட்டாளர்கள் வெளியேற்ற முயற்சித்த கம்போங் பினாங் கிராமவாசிகள் வழக்கு;
  • எண்ணில் அடங்கா தொழிலாளர் மற்றும் தொழிற்துறை வழக்குகள்

சிறந்த சட்ட ஆலோசகர்

1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுக்குச் சவால் விடுத்து, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் தாக்கல் செய்தத் தேர்தல் மனுவுக்கு அவர் எங்கள் ஆலோசகராக இருந்தார்.

பி.எஸ்.எம்.-இன் சிறந்த சட்ட ஆலோசகராக பாலா விளங்கினார், அவரும் வெங்கட்’டும் வல்லமைமிக்க ஒரு சட்டக் குழுவை உருவாக்கினர், எங்களை இலவசமாகப் பிரதிநிதிக்க, எங்களுக்கு ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு நேரங்காலம் பாராமல் ஆலோசனை வழங்க, திறமைமிக்க அவர்கள் எப்போதும் தயாராக இருந்தனர்.

எங்களின் எல்லா வழக்குகளிலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போதுகூட, மக்களைத் திரட்டி போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் பாலா எங்களுக்குக் கூறும் நிலையான ஆலோசனை, அவர் மக்கள் சக்தியை நம்பினார், நீதித்துறை நீதியை நிர்ணயிப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

திறமையானவராக இருந்தும், எப்போதும் பணிவுடன்தான் இருந்தார், ஏழை மக்களிடம் சகஜமாகப் பழகி, ஆரவாரமின்றி வாழ்ந்தார். சாதாரண மக்களுக்கும் பி.எஸ்.எம். கட்சிக்கும் பாலா மிகத் தேவையானவராக இருந்தார்.

நாட்டில், சட்ட ஒழுங்கு சரியாக இருந்திருந்தால், அவர் இன்று நம்மோடு இருந்திருப்பார்.

பாலாவின் குடும்பம் ஓர் அன்பான தந்தையை, கணவரை, மகனை, சகோதரனை இழந்துள்ளது. அவருக்கு அறிமுகமானவர்கள் அவரது மதிப்புமிக்க, தன்னலமற்ற நட்பை இழந்துள்ளனர்.

பி.எஸ்.எம். சமுதாயத்திற்கானப் போராட்டத்தில் இணைந்திருந்த ஒரு தோழரை இழந்துள்ளது. தொழிலாளர் வர்க்கம் உற்சாகமான ஒரு போராளியை இழந்துள்ளது.

10 ஆண்டுகள் கழிந்தும், அவரது கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதே நமது ஆதங்கம்.


இராணி இராசையா பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர்