நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி) அமல்படுத்திய பின்னர், மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் ஏற்பாடு சேவைத் துறையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு, மலேசிய இந்திய நிகழ்ச்சிகள் ஏற்பாடு சேவை சங்கம் (எம்.ஐ.ஏ.இ.) பிரதமர் முஹைதீன் யாசினுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
காரணம், கோவிட் -19 தொற்றுநோய்யின் போது இந்தத் தொழில்துறை முழுமையாக மூடப்பட்டது என அதன் தலைவர் கே சிவகுமார் கூறினார்.
“இரவு சந்தைகள் மற்றும் கோவிட்-19 தொற்றிற்குக் காரணமாக இருந்த பேரங்காடிகள்கூட இன்னும் செயல்பட அனுமதிக்கப்படுவதை நாம் காண முடிகிறது.
“ஆனால், பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அரங்குகளும் பிற இடங்களும் மூடப்பட்டுள்ளன.
“எனவே, இந்த விஷயத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு, நிகழ்ச்சிகள் ஏற்பாடு சேவைத் துறைக்குச் சுகாதார அமைச்சு தீர்மானித்தபடி, கடுமையான செந்தர இயங்குதல் நடைமுறைகளுடன் செயல்பட, நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்,” என்று நேற்று, பத்து மலையில், ஷெங்கா ஹாலில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சுமார் 500 நிகழ்ச்சி ஏற்பாட்டுச் சேவை நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் எம்.ஐ.ஏ.இ. முன்வைத்த கோரிக்கைகளில் சில :-
- பொருத்தமான ஊதிய மானியத் திட்டம்
- திருமண மண்டபங்களை வாடகைக்கு விடும் வர்த்தகர்கள், அதன் வளாகத்தைப் பராமரிக்க உதவும் வகையில், ஆறு மாதங்களுக்கு, அசல் வாடகையில் 30% மானியத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.
- திருமணத் தொழில்துறையில் உள்ள சிறு வணிகர்களுக்கு, சலுகை அடிப்படையில், வணிகப் பராமரிப்பு சிறப்பு மானியம் (ஜி.கே.பி.) மூலம் RM5,000 உதவி வழங்குதல்.
- 2021 வெளிநாட்டுத் தொழிலாளர் வரியில் தள்ளுபடி வழங்குதல்.
- குறைந்த வட்டியில், அரசாங்க நிதி நிறுவனங்களின் கடன் திட்டம்.
- பெரும்பாலான முதலாளிகள் அல்லது நிறுவனங்கள் கடை, வணிக வாகனங்கள் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய தற்போதைய கடன்களை தீர்க்க வேண்டியுள்ளது. அதனால், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வங்கிக்கடனைத் திருப்பி செலுத்தும் தடைகளைப் பரிசீலித்தல்.
இதுபோன்ற நடவடிக்கைகளால், இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியும் என்று சிவகுமார் கூறினார்.
இதற்கிடையில், ஷெங்கா மண்டபத்தின் நடத்துநர், டி இந்திரன், மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்காததால், நாடு முழுவதும் இதுபோன்ற வளாகங்களை நடத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“நான் இந்த மண்டபத்தை, ஒரு மாதத்திற்கு RM20,000 வாடகை என, 15 வருடங்களுக்கு எடுத்துள்ளேன். எனது வருமானம் கிட்டத்தட்ட 100 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாதந்தோறும் நான் பணம் செலுத்துவது எப்படி?
“வழிபாட்டுத் தலங்களில் 30 பேர் கூடுவதை அனுமதிக்கிறார்கள். ஆனால், மண்டபத்தில் 30 பேருடன் ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை.
“எனவே, எங்கள் வணிகத்திற்கு உயிர் கொடுக்க, அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.