டாக்டர் எம் : அன்வர் என்னை நிராகரித்ததால், பிஎச் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியாமல் போனது

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், தன்னை ஏற்க மறுத்ததால்தான் புத்ராஜெயாவைத் திரும்பப் பெறுவதற்கான பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) முயற்சி தோல்வியடைந்தது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.

“தேசியக் கூட்டணி அரசாங்கத்தை அகற்றுவதற்கான முயற்சிகளைப் பி.எச். தொடர்கின்றது. எனது கட்சியும் எனது ஆதரவாளர்களும் இந்த முயற்சியில் ஒன்றிணைய ஒப்புக்கொள்கிறார்கள்.

“ஆனால், அன்வர் என்னை முற்றிலுமாக நிராகரிக்கிறார். நான் நிராகரிக்கப்பட்டால், எனது ஆதரவாளர்கள் இந்தத் திட்டத்தில் சேர மாட்டார்கள். மேலும், மக்களவையின் போதுமான ஆதரவைப் பெற, மூன்று உறுப்பினர்கள் (பெரும்பான்மை) நமக்குக் கிடைக்க மாட்டார்கள்,” என்று அவர் இன்று வலைப்பதிவு இடுகை ஒன்றில் தெரிவித்தார்.

222 எம்.பி.க்களில் 112 பேரின் ஆதரவைப் பிரதமர் முஹைதீன் யாசின் பெற்றுள்ளார். இருப்பினும், ஓர் அரசு தரப்பு எம்.பி. மற்றும் ஓர் எதிர்க்கட்சி எம்.பி.-யின் மரணத்தைத் தொடர்ந்து மக்களவையில் இரண்டு காலியிடங்கள் உள்ளன.

அந்த இடுகையில், அன்வரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன்பு, ஆறு மாதங்களுக்குப் பிரதமர் பதவியை வகிக்க அவர் முன்மொழியப்பட்டதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.

“அமானாவும் சில டிஏபி உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டனர், ஆனால் அன்வர் மறுத்துவிட்டார். அன்வர் என்னை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

செப்டம்பர் மாதம் அன்வர் பெரும்பான்மையைப் பெற்றதாக அறிவித்தபோது, தனது குழுவை அவர் விலக்கிவிட்டதாகவும் மகாதீர் கூறினார்.

தற்போது, நான்கு எம்.பி.க்களைக் கொண்ட பெஜுவாங் கட்சியை மகாதீர் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆனால், அன்வர் இன்னும் பிரதமராக முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். போதுமான எண்ணிக்கை இருப்பதாக அன்வர் கூறியது பொய்.

“அன்வாரின் திட்டத்தில், எனக்கு இடமில்லை. என்னை ஒதுக்கி வைத்த பிறகு, அன்வர் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகிறது.

முன்னதாக, “சதி மற்றும் துரோகங்களை” இனியும் ஏற்க முடியாது என்பதனால் மகாதீரை ஓரங்கட்டியதாகப் போர்ட்டிக்சன் எம்.பி.யான அன்வர் கூறினார்.