இந்த வாரம் பட்ஜெட்`டுக்கான வாக்கெடுப்பு, பி.என். மீதான அம்னோவின் விசுவாசத்திற்கு ஒரு சோதனை

மக்களவை | இரண்டு வார மக்களவை விவாதத்திற்குப் பிறகு, 2021 வரவு செலவு திட்டத்திற்கான முதல் வாக்கெடுப்பு இந்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கூட்டணியான தேசியக் கூட்டணிக்கு இது ஒரு முக்கியமான சோதனைக் களமாக இருக்கும், குறிப்பாக அம்னோவின் ஆதரவில்.

2021 வரவுசெலவு திட்டம் தொடர்பான கொள்கை விவாதத்தை அமைச்சர் திங்கள்கிழமை தொடங்குவார்.

அட்டவணைப்படி அனைத்தும் சரியாக நடந்தால், விவாதத்தின் நிறைவு வியாழக்கிழமை நடைபெறும், அதன் பிறகு பட்ஜெட்டிற்கான வாக்கெடுப்பு நடைபெறும்.

2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து எம்.பி.க்களையும் யாங் டி-பெர்டுவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அறிவுறுத்தியுள்ளார், ஆனால் நிலைமை இன்னும் மாறக்கூடியதாகவேத் தெரிகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கடன் செலுத்துவதற்கான தடை நீட்டிப்பு மற்றும் இபிஎஃப் கணக்கு 1-லிருந்து RM10,000 வரை திரும்பப் பெற தனிநபர்களை அனுமதித்தால் மட்டுமே தேசிய முன்னணி பட்ஜெட்டை ஆதரிக்கும் என்று பலமுறை கூறியுள்ளார்.

ஆனால், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, இபிஎஃப்-இல் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை அரசாங்கம் செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீ ஹம்சா எம்.பி.க்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதிக்க வேண்டும் என்றும் அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவருமான அவர் கோரினார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான அம்னோவின் ஆதரவு இன்னும் நிச்சயமற்றதாகக் கூறப்படுகிறது, காரணம், ஆளும் கூட்டணியில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களைக் கொண்ட அக்கட்சி மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்பதால் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவையில் 222 உறுப்பினர்களில் 112 எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே முஹைதீன் கொண்டுள்ளார்.

ஆளுங்கட்சி எம்.பி. (பி.என். கெரிக்) மற்றும் எதிர்க்கட்சி எம்.பி. (வாரிசான், பத்து சாபி) மறைவைத் தொடர்ந்து, இரண்டு காலி இடங்களும் உள்ளன

இதற்கிடையில், வரவு செலவு திட்டத்தை இரு கட்சி ஒத்துழைப்பாக மாற்ற புத்ராஜெயா முயன்றாலும், அதனை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகளை எதிர்க்கட்சிகள் காட்டியுள்ளன.

இந்த வாரம் போதுமான வாக்குகளைப் பெற்றாலும், இன்னும் அது முடிவடைந்தாக அர்த்தமில்லை, குழு மட்டத்திலான விவாதத்தின் போதும் வாக்களிப்பும் நடைபெறும்.

வழக்கமாக, பட்ஜெட்டை தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும், கொள்கை அளவிலான வாக்களிப்பின் போது மட்டுமே நடைபெறும்.

2017-ம் ஆண்டில், 2018 பட்ஜெட் குழு அளவிலான வாக்களிப்பின் போது, பக்காத்தான் ஹராப்பான் திடீர் தாக்குதலை நடத்தி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.