`ஓய்வுபெற்ற ஜி.எல்.சி.க்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர், ஒருசிலருக்கு மாதம் RM180 மட்டுமே ஓய்வூதியம்’ – தொழிற்சங்கம்

அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (ஜி.எல்.சி.) வேலை செய்து, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தைப் புத்ராஜெயா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழிற்சங்கம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குழுவினர் நீண்ட காலமாக அரசாங்கத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பதாக, மலேசிய சர்வதேசத் தொழிற்சங்க மன்றம் (UNI-Malaysia Labour Centre (UNI-MLC) யுஎன்ஐ-எம்எல்சி) கூறியுள்ளது.

ஓய்வுபெற்ற இவர்கள், ஒரு காலத்தில் மலேசியாவில் தனியார்மயமாக்கல் கொள்கையை ஆதரித்தவர்கள் வரிசையில் இருந்தவர்கள் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், ஜி.எல்.சி. நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற இவர்களில் சிலர் மாதத்திற்கு RM180.00 என குறைவான ஓய்வூதியத்துடன் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக யுஎன்ஐ-எம்எல்சி கூறுகிறது.

“டெலிகாம் மலேசியா பெர்ஹாட், தெனகா நேஷனல் பெர்ஹாட், மலேயன் இரயில்வே, போஸ் மலேசியா பெர்ஹாட், நோர்த் போர்ட், பிளஸ், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் 1980-கள் மற்றும் 1990-களின் ஆரம்பத்தில் தனியார்மயமாக்கப்பட்ட பிற ஏஜென்சிகளின் ஓய்வுபெற்ற ஜி.எல்.சி.க்களை, 2021 பட்ஜெட் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது,” என்று யுஎன்ஐ-எம்எல்சி தலைவர் மொஹமட் ஷாஃபி மம்மல் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“சராசரியாக, ஓய்வுபெற்ற ஜி.எல்.சி.க்களின் சம்பளம் அந்த நேரத்தில் மிகக் குறைவு, அவர்களில் சிலருக்குப் போதுமான சேவை காலம், 25 ஆண்டுகள் இல்லை, தற்போது அவர்கள் பெறும் ஓய்வூதியம் மாதத்திற்கு RM180.00 வரை குறைவாக உள்ளது.

“தற்போதைய நிலைமையில், விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவினங்களைப் பார்த்தால், இந்த ஓய்வூதியம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் போதுமானதாக இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜி.எல்.சி. நிறுவனங்களில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அத்தொழிற்சங்கம், கடந்த 20 ஆண்டுகளில் 10 மனுக்களை அனுப்பியுள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகவும் ஷாஃபி கூறினார்.

அம்மனுவில், 2021 வரவுசெலவுத் திட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டிய குறைந்த ஓய்வூதியக் கட்டண விகிதங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“2021 வரவுசெலவுத் திட்டத்தில் எந்தவொரு குழுவும் வெளியேறவோ / ஓரங்கட்டப்படவோ கூடாது என்ற அரசாங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் நாங்கள் அந்தக் கோரிக்கையை அனுப்பியுள்ளோம்.

“இருப்பினும், எங்கள் ஓய்வூதியக் கட்டண விகிதத்தச் சமாளிக்க, 2021 பட்ஜெட்டில் எந்த மாற்றங்களும் இல்லை,” என்று அவர் கூறினார்.