எம்.பி: விவாதத்திற்கு இடமில்லை என்றால், பட்ஜெட்டை எப்படி ஆதரிப்பது?

மக்களவை | இந்த வியாழக்கிழமை வாக்களிக்கப்படுவதற்கு முன்னர், 2021 வரவுசெலவுத் திட்டத்தை எம்.பி.க்கள் விவாதிப்பதற்கான கால அவகாசத்தை, நான்கு மணிநேரமாக மட்டுப்படுத்த மக்களவை எடுத்த முடிவை பி.கே.ஆர். எம்.பி. விமர்சித்தார்.

விவாத நேரத்தைக் கட்டுப்படுத்துவது, நாடாளுமன்றத்தின் உண்மையான செயல்பாட்டிற்குப் பொருந்தாது என்று பத்து எம்.பி. பி பிரபாகரன் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“இந்த நாடாளுமன்ற அமர்வு, 2021 வரவுசெலவுத் திட்டம் தொடர்பான பிரச்சினைகளை எம்.பி.க்கள் விவாதம் செய்வதைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.

“விவாதிக்காமல், கருத்துகளைப் பரிமாறாமல் பட்ஜெட்டை எவ்வாறு அங்கீகரிப்பது?” என்று அவர் கேட்டார்.

கோவிட் -19 தொற்றைக் காரணம் காட்டி, 32 மில்லியன் மலேசியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, 80 எம்.பி.க்களுக்கு வெறும் நான்கு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டது அபத்தமானது என்றார் அவர்.

“ஒவ்வொரு அமர்வுக்கு முன்னும், மக்களவை எப்போதும் சுத்தம் செய்யப்படுகிறது, ஒவ்வொரு எம்.பி.யும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை பரிசோதனை செய்யப்படுகிறார்கள். ஆக, 4 மணி நேரம் அல்லது 8 மணி நேரம் உட்கார்ந்திருப்பதன் வித்தியாசம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.