அம்னோ மற்றும் பெர்சத்துவின் ஒத்துழைப்பு இல்லாமல், கட்சியால் முன்னோக்கி செல்ல முடியாது என்று பாஸ் துணைத் தலைவர் மொஹமட் அமர் நிக் அப்துல்லா கூறினார்.
பாஸ், அம்னோ மற்றும் பெர்சத்து இடையே, ஒருவருக்கொருவர் தேவை என்று அவர் கூறினார்.
அம்னோ அல்லது பெர்சத்துவுடன் தனித்து இருப்பதும் அவர்களுக்கு பயனளிக்காது என்று அவர் சொன்னார்.
மூன்று கட்சிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு தேவை, அதனால்தான் ‘முவாஃபாகாட் நேஷனல்’ மற்றும் தேசியக் கூட்டணி தேவை என்ற அவர், இந்த மூன்று கட்சிகளுக்கும் தனித்தனி பலம் உண்டு என்றார்.
“தற்போதையப் பிரச்சனைக்குக் காரணம், அம்னோவின் உள்கட்சி விவகாரம்.
“அன்னுவாரின் அறிக்கைக்கு, அம்னோ தலைவர்களே மாற்று அறிக்கை விடுகின்றனர்.
“ஆக, அம்னோ அதன் உள்கட்சி பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று நாம் எதிர்பாக்கிறோம், நாம் அதில் தலையிட முடியாது.
“என்னைப் பொறுத்தவரை, கருத்து வேறுபாடுகள் என்பது இயல்பானவை, ஒரு முறை உட்கார்ந்து, கலந்து பேசினால் நல்ல தீர்வு கிடைக்கும். தனிதனியாக அறிக்கை விடுவது பிரச்சனையைத் தீர்க்காது,” என்றும் அவர் தெரிவித்தார்.
“தனித்தனியே ஊடகங்களில் பேசுவது, மக்களுக்குத் தவறான செய்திகளைக் கொடுப்பதோடு, கட்சி ஆதரவாளர்கள் இடையே குழப்பத்தையும் ஏற்படுத்தும்,” என்று அவர் மேலும் கூறினார்.