நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,884 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தினசரி பதிவுகளில் ஆக அதிகமாகும்.
முந்தைய பதிவுகளில், மிக அதிகமாக நவம்பர் 6-ஆம் தேதி, 1,755 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே 883 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று, சபாவில் 2 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 337-ஆக உயர்ந்துள்ளது.
திரெங்கானு, பஹாங், மலாக்கா, லாபுவான் மற்றும் சரவாக்கில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவசரப் பிரிவில் 115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 48 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
சிலாங்கூரில் 1,203 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் 1,060 தோப் குளோஃப் தொழிற்சாலை தொழிலாளர்களை உள்ளடக்கிய தெராத்தாய் திரளையச் சார்ந்தது.
சிலாங்கூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சபாவில் 289, கோலாலம்பூரில் 196, பேராக்கில் 81, நெகிரி செம்பிலானில் 41, கெடாவில் 36, ஜொகூரில் 15, பினாங்கில் 12, கிளந்தானில் 9, பெர்லிஸ் மற்றும் புத்ராஜெயாவில் தலா 1,
மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை :- இண்டா மாஸ் திரளை – சிலாங்கூர், பெட்டாலிங் & கோலாலம்பூர், தித்திவங்சா & கெப்போங் மாவட்டம்; பிந்தாங் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய்; தேஜா காசே திரளை – பேராக், கிந்தா & கம்பார் மாவட்டம்; கோபேனா திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்.