`ஜோ லோ, 1எம்.டி.பி. பற்றி முதலாளிகளை எச்சரித்தேன்`, முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர்

முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் குழுமத்தின் வங்கியாளர் ரோஜர் ங், மலேசிய நிதியாளரான ஜோ லோவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று சர்வதேச முதலீட்டு வங்கியை “எச்சரித்தேன்” என்றும், லோ’வை “நம்பக்கூடாது” என்றும் தனது முதலாளிகளிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

ப்ளூம்பெர்க்கின் ஓர் அறிக்கையின்படி, ங் 126 பக்கங்களைத் தாக்கல் செய்துள்ளார், அதில் அவர் மீதான இலஞ்ச வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த அறிக்கையில், முதலில் லோவை வங்கியில் அறிமுகப்படுத்தியது தான்தான் என்பதை ஒப்புக் கொண்டார், ஆனால் அது, “2009-ஆம் ஆண்டின் முற்பகுதியில், லோ ஒரு மோசடித் திட்டத்தை நடத்துவதாக யாருக்கும் தெரியாதபோது,” என்று கூறினார்.

இலஞ்சம் மற்றும் பணமோசடி சதி குற்றச்சாட்டிற்காக, ங் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் விசாரணையை எதிர்கொள்ள உள்ளார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் பிறருக்கு 1எம்.டி.பி. நிதியிலிருந்து, குறைந்தபட்சம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ய உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

லோ அல்லது முழு பெயர் லோ டேக்-ஜோ, இந்தத் திட்டத்தின் சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மலேசியாவில் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், அவர் மீது வழக்குத் தொடர எந்த அதிகாரமும் இல்லை என்று ங் கூறினார்.

லோவுடன், கோல்ட்மேன் வணிகம் செய்ததற்கான குற்றச்சாட்டை, ங் தனது முன்னாள் முதலாளி டிம் லெய்ஸ்னர், முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் மீது சுமத்தினார், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கும் அவருக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கும் ஒப்புக் கொண்டார், இந்தத் திட்டத்தில் லெய்ஸ்னர் ஒரு முக்கிய நபராக இருப்பதாகவும் கூறினார்.

2010, மார்ச் முற்பகுதியில், கோல்ட்மேனில் உள்ள தனது மேலதிகாரிகளை “லோவுடன் இணைந்து செயல்படுவதில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு” அவர் எச்சரித்தார் என்று, அவரது வழக்கறிஞர் மார்க் அக்னிஃபிலோ கூறியுள்ளதை, ங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“ங்’கின் எச்சரிக்கைகள் நிறுவனத்தின் மிக உயர்ந்த மற்றும் சட்டப் பிரிவுகளுடன் பகிரப்பட்டன. இருப்பினும், அந்நிறுவனம் அவருக்குச் செவிசாய்க்கவில்லை,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கோல்ட்மேன் பில்லியன்கள் செலுத்தியுள்ளது

கோல்ட்மேன் செய்தித் தொடர்பாளர் மேவ் டுவாலி, லெய்ஸ்னரின் வக்கீல் ஹென்றி மசுரெக் மற்றும் நியூயோர்க் புரூக்ளினில் செயல்படும் அமெரிக்க வழக்கறிஞர் சேத் டுச்சார்மின் செய்தித் தொடர்பாளர் ஜான் மார்சுல்லி, இந்த வழக்கை விசாரிக்கும் அலுவலகம், அனைவரும் தாக்கல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அமலாக்க வரலாற்றில், மிகப்பெரிய வெளிநாட்டு இலஞ்ச வழக்கு 1எம்.டி.பி. ஊழலில் பங்கு வகித்ததற்காக, நீதித்துறை மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகளுக்குப் பல பில்லியன் டாலர் அபராதம் செலுத்த கோல்ட்மேன் ஒப்புக் கொண்டது.

மலேசியாவில், பெரிக்காத்தா நேஷனல் அரசாங்கம் 1எம்.டி.பி-கோல்ட்மேன் சாச்ஸ் இடையிலான ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளையும் வெளியிட மறுத்துவிட்டது, மலேசியாவிற்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கிக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் வந்துள்ள ‘இரகசியத்தன்மை விதிமுறையை’ நடைமுறைச் சட்ட அமைச்சர் தகியுதீன் ஹசன் மேற்கோளிட்டுள்ளார்..

இதேபோல், களவாடப்பட்ட 1எம்.டி.பி. சொத்துக்களில், 1.4 பில்லியன் அமெரிக்க டாலரை (RM5.97 பில்லியன்) வங்கி நிறுவனம் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிய விவரங்களையும் அரசாங்கம் வெளியிட மறுத்துவிட்டது.