தடுத்து வைக்கப்பட்டும், புலம்பெயர்ந்தக் குழந்தைகள் தங்குவதற்குக் குடிநுழைவுத் துறையின் முகாம்கள் பொருத்தமானவை அல்ல என்று தேசியப் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கண்டறிந்துள்ளது.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், நாடாளுமன்றக் குழு நெகிரி செம்பிலானில் உள்ள லெங்கேங் குடிநுழைவு முகாமுக்குச் சென்று பார்வையிட்டப் பிறகு, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட பிஏசி தூதுக்குழுவில், அதன் அப்போதையத் தலைவர் நோராய்னி அஹ்மத், பெர்மாத்தாங் பாவ் எம்.பி. நூருல் இஸ்ஸா அன்வர் மற்றும் குளுவாங் என்.பி. வோங் ஷூ கீ-யும் இருந்தனர்.
“பிஏசி வருகையின் போது, புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையும், இன்னொரு குழந்தையும், தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது பாதுகாவலருடன் முகாமில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
“தடுப்புக்காவல் முகாமின் சூழல் பொருத்தமற்றது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு அது உகந்ததாக இல்லை என்பது கண்டறியப்பட்டது,” என்று வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையில், பிஏசி தெரிவித்துள்ளது.
குடிநுழைவு திணைக்களத்தின் மூலம், உள்துறை அமைச்சு, ஆதரவற்ற அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.
அந்த மாற்று திட்டங்கள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று நம்பப்பட்டது. இருப்பினும், பக்காத்தான் ஹராப்பானின் அத்திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று மலேசியாகினி -க்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த குழந்தைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் (என்.ஜி.ஓ) நடத்தப்படும் முகாம்களின் பராமரிப்பில் வைக்கப்படும். பின்னர், அவர்களின் குடும்பத்தைக் கண்டுபிடிக்க என்.ஜி.ஓ.க்கள் முற்படுவார்கள் அல்லது அவர்களை அவரவர் நாட்டிற்கேத் திருப்பித் தர முற்படுவார்கள்.